New Updates! Fresh news just arrived.

நிந்தவூரில் சமூக, கலாச்சார விழுமியங்களை மேம்படுத்துதல் கு...

News

நிந்தவூரில் சமூக, கலாச்சார விழுமியங்களை மேம்படுத்துதல் குறித்து விரிவான கலந்துரையாடல்!

April 21, 2026 2:28 pm
நிந்தவூரில் சமூக, கலாச்சார விழுமியங்களை மேம்படுத்துதல் குறித்து விரிவான கலந்துரையாடல்!
நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சீர்கேடுகளை கட்டுப்படுத்தி, சமூக, கலாச்சார விழுமியங்களை மேம்படுத்தி சமூக பாதுகாப்பையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய கலந்துரையாடலொன்று ஞாயிற்றுக்கிழமை (19) நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

நிந்தவூர் பிரதேச சபையினுடைய தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது, நிந்தவூர் பிரதேசத்தில் அதிகரித்து வருகின்ற போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை, இளவயது மரணங்கள், வீதி விபத்துக்கள் மற்றும் ஒழுக்கச் சீர்கேடுகள் போன்ற சமூகத்தினை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் விரிவான கருத்துப்பகிர்வுகள் இடம்பெற்றன.

இப்பிரச்சினைகள் சமூகத்தின் எதிர்காலத்திற்கும், குறிப்பாக எதிர்கால இளைஞர் தலைமுறைக்குமான பாதுகாப்பிற்கும் கடுமையான சவாலாக உருவெடுத்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மேலும், இவ்வாறான சீர்கேடுகளை தனிப்பட்ட முயற்சிகள் அல்லது தனி அமைப்புகளின் செயல்பாடுகள் மூலம் மட்டும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்பதும், அரசியல் பிரதிநிதிகள், அரச நிர்வாகம், மத நிறுவனங்கள், சமூக அமைப்புகள், பாதுகாப்பு துறை மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட வேண்டியது அவசியம் என்பதும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து, சமூக மற்றும் கலாச்சார சீர்கேடுகளை ஒழிப்பதற்கான ஒருங்கிணைந்த செயற்பாட்டு பொறிமுறையை உருவாக்குவதற்கான ஆரம்பகட்ட ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான கூட்டுப் பொறுப்புணர்வும் வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களை இலக்கு வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல், பாடசாலை மட்டத்திலிருந்து சமூக ஒழுக்கம் தொடர்பான விழிப்புணர்வை வலுப்படுத்தல், போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தல், மத மற்றும் சமூக நிறுவனங்களின் செயற்பாட்டு பங்களிப்பை அதிகரித்தல், மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கண்காணிப்பு மற்றும் ஒத்துழைப்பு முறைகளை வலுப்படுத்துதல் ஆகிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

இத்துடன், இளைஞர்களை நேர்மறையான சமூகச் செயற்பாடுகளுக்கு வழிநடத்தும் திட்டங்கள், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள், மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.

மொத்தத்தில், இக்கலந்துரையாடல் நிந்தவூர் பிரதேசத்தில் சமூக ஒழுங்கையும், நல்லிணக்கத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் அனைத்து தரப்பினரையும் ஒரே தளத்தில் இணைக்கும் முக்கிய ஆரம்பமாகக் கருதப்படுவதுடன், எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் உள்ளிட்ட நிந்தவூர் பிரதேச சபையினுடைய உறுப்பினர்கள், கிராம நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் நன்னடத்தை உத்தியோகத்தர், நிந்தவூர் உலமா சபையினுடைய நிர்வாகிகள், நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையினுடைய உறுப்பினர்கள், ஜாமிஊத் தெளஹீத் ஜும்மா பள்ளிவாயல், இஷ்வா ஜும்மா பள்ளிவாயல் மற்றும் தைக்கா பள்ளிவாயல் நிர்வாகிகள் மற்றும்கோவில் நிர்வாகிகள், பிரஜா சக்தி அமைப்பினுடைய பிரதிநிதிகள், சக்காத் சபை நிர்வாகிகள், கத்தீப் மற்றும் பேஸ் இமாம் சம்மேளனம், நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணி மற்றும் நிந்தவூர் இளைஞர் தன்னார்வ அணி மற்றும் பல்வேறு சிவில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now