New Updates! Fresh news just arrived.

சுற்றுச்சூழலை அழித்து முன்னெடுக்கும் அபிவிருத்தியை ஏற்க ம...

News

சுற்றுச்சூழலை அழித்து முன்னெடுக்கும் அபிவிருத்தியை ஏற்க முடியாது: பிரதமர்!

September 30, 2026 8:28 pm
சுற்றுச்சூழலை அழித்து முன்னெடுக்கும் அபிவிருத்தியை ஏற்க முடியாது: பிரதமர்!
பொருளாதார வளர்ச்சியின் பெயரால் இயற்கை வளங்களினை அழிப்பது ஒருபோதும் அர்த்தமுள்ள அபிவிருத்தியாக அமையாது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பல முக்கிய திட்டங்களினை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் கொழும்பில் உள்ள விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட 'ப்ளாஸ்டிக், கண்டுபிடிப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைபேறுதன்மை' தொடர்பிலான 3ஆவது சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதமர், 2027-2029 காலப் பகுதியில் 34 பில்லியன் ரூபாய் செலவில் "பிவிதுரு புரவர" தேசிய கழிவு முகாமைத்துவ திட்டம் செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த திட்டத்தின் மூலம் ப்ளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத கழிவுகள் சூழலில் கொட்டப்படுவதினை குறைத்தல், மறுசுழற்சி மற்றும் உரம் தயாரிப்பினை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு சட்டங்கள் மட்டும் போதாது எனவும், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வினை கல்வி முறையின் மூலமே கட்டியெழுப்ப வேண்டும் என சுட்டிக்காட்டிய பிரதமர், புதிய கல்வி மறுசீரமைப்புகள் ஊடாக சுற்றுச்சூழல் கல்வி, கழிவு முகாமைத்துவம் மற்றும் வட்டப் பொருளாதாரக் கருத்துக்களினை பாடசாலைக் கலைத்திட்டத்தில் நடைமுறை ரீதியாகச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மட்டத்தில் “பசுமைப் பாடசாலை” கருப்பொருளினை ஊக்குவித்து, சிறுவயதில் இருந்தே பிள்ளைகளினை 'பூஜ்யக் கழிவு' (Zero Waste) பழக்கத்துக்கு வழிநடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மாசடைந்த நிலத்தையோ அல்லது ப்ளாஸ்டிக்களால் நிறைந்த கடலையோ அன்றி, சுதந்திரமாக சுவாசித்து ஆரோக்கியமாக வாழக்கூடிய தூய்மையான, பசுமையான சூழலையே எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now