New Updates! Fresh news just arrived.

வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள் குறித்து...

News

வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள் குறித்து அமைச்சர் மற்றும் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்!

September 19, 2026 9:08 pm
வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள் குறித்து அமைச்சர் மற்றும் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்!
வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள், மருத்துவமனைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மாகாண சுகாதாரத்துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான மாகாண அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (19) சனிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கையில் உள்ள மாகாண சபைகளில் வடக்கு மாகாண சபையே அதிகளவான மருத்துவமனைகளினை நிர்வகித்து வருவதோடு, மாவட்டப் பொது மருத்துவமனைகளும் மாகாண சபையினுடைய நிர்வாகத்துக்குட்பட்டே இயங்கி வருகின்றமை தொடர்பில் அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதனைக் கருத்திற்கொண்டு, ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சுகாதாரத்துறைக்கு அதிகளவான மூலதன மற்றும் பராமரிப்பு நிதி ஒதுக்கீடு தேவைப்படுவதாகவும் வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக, நிதி ஆணைக்குழுவால் அனுமதிக்கப்படும் பராமரிப்பு நிதி போதுமானதாக இல்லாத நிலை தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், அதிகளவான மருத்துவமனைகள் மற்றும் அவற்றின் உட்கட்டமைப்புகளைப் பராமரிக்க வேண்டியிருப்பதால் மாகாண சுகாதாரத்துறைக்கு ஏற்படும் நிதிச் சுமையும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், மருத்துவமனைகளுக்குத் தனித்தனியாக நிதி ஒதுக்கீடுகளினை வழங்காமல், மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கான ஒதுக்கீடாக ஒருங்கிணைந்த முறையில் நிதி வழங்கப்படுவதால் நடைமுறையில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் குறித்தும் அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இதனோடு, மருத்துவமனைகளின் தேவைகளினை முறையாக ஒழுங்குபடுத்தி முன்னுரிமைப்படுத்துதல், தேவைகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடுகளினை மேற்கொள்ளுதல் மற்றும் கொள்முதல் செயன்முறைகளில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

வடக்கு மாகாண சுகாதார சேவையினுடைய தற்போதைய தேவைகள் மற்றும் நடைமுறைச் சவால்களுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பது குறித்தும், குறிப்பாக மேலதிக நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட விடயங்களில் நிதி ஆணைக்குழுவோடு கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளினை முன்னெடுப்பதாக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரினுடைய செயலாளர், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர் (நிதி), பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), ஆளுநரினுடைய பிரத்தியேக செயலாளர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரினுடைய இணைப்பாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now