New Updates! Fresh news just arrived.

கிளிநொச்சி மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக ஆரம்பிக்கப்...

News

கிளிநொச்சி மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 'செயற்கை முறை கருக்கட்டல்' தொடர்பான கலந்துரையாடல்!

June 25, 2026 5:57 pm
கிளிநொச்சி மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 'செயற்கை முறை கருக்கட்டல்' தொடர்பான கலந்துரையாடல்!
இலங்கை அரச மருத்துவத்துறை வரலாற்றிலேயே முதற்தடவையாகக் கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 'செயற்கை முறை கருக்கட்டல்' (ஐ.வி.எவ்.) சேவையின் முன்னேற்றங்கள் மற்றும் அதற்கான அத்தியாவசியத் தேவைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (25) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இலங்கையிலேயே முதல் தடவையாக அரச மருத்துவமனையொன்றில் செயற்கை முறை கருக்கட்டல் சேவையை முழுமையாக இலவசமாக ஆரம்பித்தமைக்காகத் தனது விசேட பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார். தற்போது இந்தச் சேவையானது எமது பிரதேசத்துக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி வருகின்றது. எமது மக்களில் பலரும் பல இலட்சம் ரூபாய்களைச் செலவு செய்து வெளிநாடுகளிலோ அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ தான் இந்தச் சிகிச்சையை மேற்கொள்கின்றனர். இதனால் வறிய மக்களுக்கு இவ்வாறானதொரு வாய்ப்பு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. தற்போது அவர்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும் வகையில் இந்தச் சேவையானது, கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையின் 'பெண்கள் பராமரிப்புக்கான சிறப்பு மையத்தில்' பேராசிரியர் எஸ்.ரகுராமன் அவர்களின் வழிகாட்டலில் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் ரகுராமன் மற்றும் மருத்துவமனைப் பணிப்பாளர் உள்ளிட்ட முழு மருத்துவக் குழுவினருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்ட ஆளுநர், ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சிறப்பான பயணத்தை எவ்வித இடையூறுகளுமின்றித் தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த செயற்றிட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத் தேவைகள் குறித்துப் பேராசிரியர் ரகுராமன் விரிவாக விளக்கமளித்தார்.

மாதமொன்றுக்கு 10 தொடக்கம் 15 ஐ.வி.எவ். சிகிச்சைச் சுழற்சிகளை இலக்காகக் கொண்டு செயற்படுவதற்கும், சேவையைத் தடையின்றித் தொடர்வதற்கும் அவசியமான நான்கு பிரதான விடயங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆழமாக ஆராயப்பட்டன.

தற்போதைய நிலையில் இரண்டு தாதிய உத்தியோகத்தர்களும், ஒரு இணைப்பாளர் மற்றும் ஒரு கருத்தரிப்பு உதவியாளரும் சேவையாற்றுகின்றனர். சேவையை விரிவாக்கும் நோக்கில், மாதத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் சூல்முட்டை சேகரிப்பு நடவடிக்கைகளுக்காக ஒரு மருத்துவ அதிகாரியும், மயக்கமருந்து நிபுணருக்கு உதவுவதற்காக மேலதிகமாக ஒரு தாதிய உத்தியோகத்தரும், சத்திரசிகிச்சைக் கூடத் தயாரிப்புகளுக்காக இரண்டு சுகாதார உதவியாளர்களும் நியமிக்கப்பட வேண்டியதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்குரிய ஒழுங்குகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் ஆளுநர் உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.

ஒரு நோயாளிக்கான ஆய்வுகூட மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான செலவு சுமார் 130,000 ரூபாவாகவும், தூண்டுதல் மருந்துகளுக்கான செலவு சுமார் 120,000 ரூபாவாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஒரு நோயாளிக்கு 250,000 ரூபா செலவாகின்ற நிலையில், மாதமொன்றுக்கு அதிகபட்சம் 15 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க சுமார் 4 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. இதற்கான நிதி ஒதுக்கீடுகள், கொள்வனவு நடைமுறைகளில் உள்ள சவால்களைத் தீர்க்கும் வழிமுறைகள் மற்றும் நன்கொடைகளை மருத்துவமனை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஊடாக எவ்வாறு வெளிப்படைத்தன்மையுடன் கையாள்வது என்பது குறித்தும் ஆராயப்பட்டது.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு 4 முதல் 6 மருத்துவ உத்தியோகத்தர்கள் மாதமொன்றுக்கு 10 முதல் 12 தடவைகள் பயணிக்க வேண்டியுள்ளதால், அவர்களுக்கான பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்வதாகச் சுகாதார அமைச்சின் செயலாளர் உறுதியளித்தார்.

மேலும், சிகிச்சைச் சேவைகளை எவ்விதப் பின்னடைவுமின்றி முன்னெடுப்பதற்கு முன்னுரிமை அடிப்படையில் தேவைப்படும் பல்வேறு ஆய்வுகூட உபகரணங்களைத் துரிதமாகப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மருத்துவச் சேவையை வடக்கு மாகாண மக்களுக்குத் தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தேவையான அனைத்து நிர்வாக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளையும் உடனடியாகப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஆளுநர் இதன்போது பணிப்புரை விடுத்தார்.

இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மருத்துவமனைப் பணிப்பாளர், குடும்ப நல மருத்துவப் பேராசிரியர் மற்றும் கணக்காளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now