New Updates! Fresh news just arrived.

ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்க...

News

ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

February 3, 2026 8:17 pm
ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாக கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு ஒன்று தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் 2022 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (3) ரிட் கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பை வழங்கிய போதே, ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

தம்மிக்க கணேபொல, மாயாதுன்ன கொரயா, பி. குமாரன் ரட்ணம், சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினாலேயே இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், புதிய சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்படுமாயின், கோட்டை நீதவான் நீதிமன்றில் உள்ள குறித்த தனிப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு இந்தத் தீர்ப்பு தடையாக இருக்காது எனவும் நீதியரசர்கள் குழாம் தெரிவித்தது.

இம்மனுவின் பிரதிவாதிகளாக அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவரான ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாக கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தி, அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட பிரதிவாதிகள் தனக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் 2022 ஆம் ஆண்டு தனிப்பட்ட முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு சமர்ப்பித்த முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தனிப்பட்ட முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அந்தத் தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் திருப்தியடைந்த நீதவான், நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தனக்கு அழைப்பாணை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முடிவுகளை சாட்சியங்களாகக் கருத முடியாது எனச் சுட்டிக்காட்டும் மனுதாரர், அவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தனிப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நீதவான் எடுத்துள்ள முடிவு சட்டத்திற்கு முரணானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, தனக்கு எதிராக பிரதிவாதிகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் அழைப்பாணை விடுக்குமாறு நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவை வலுவிழக்கச் செய்யும் வகையில் ரிட் கட்டளை ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மனுவை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now