New Updates! Fresh news just arrived.

முத்துநகர் சோலார் திட்டத்தால் விவசாயிகளும் மீனவர்களும் பா...

News

முத்துநகர் சோலார் திட்டத்தால் விவசாயிகளும் மீனவர்களும் பாதிப்பு: இம்ரான் மஹ்ரூப் எம்.பி. கவலை!

May 17, 2026 7:15 pm
முத்துநகர் சோலார் திட்டத்தால் விவசாயிகளும் மீனவர்களும் பாதிப்பு: இம்ரான் மஹ்ரூப் எம்.பி. கவலை!
திருகோணமலை முத்துநகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சோலார் பவர் திட்டத்தால் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் விவசாயக் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்துள்ளார்.

துறைமுக அதிகார சபை என்ற பெயரில் பல தலைமுறைகளாக விவசாயத்தை நம்பி வாழ்ந்து வந்த மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்களது பாரம்பரிய காணிகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டங்களிலும் அதிகாரிகளுடனான சந்திப்புகளிலும் ஈடுபட்டு வந்தபோதிலும், இதுவரை நிரந்தரமான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மேலும் சுமார் 400 ஏக்கர் விவசாய நிலப்பரப்புகளை உள்ளடக்கி சோலார் பவர் திட்டத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதன் காரணமாக விவசாயிகளுடன், முத்துநகர் பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தி வந்த கடற்கரைக்கு செல்லும் முக்கிய வீதி மறைக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் தங்களது தொழிலுக்காக கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலைமையால் மீனவர்களின் அன்றாட வருமானமும் குடும்ப வாழ்வாதாரமும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை மாற்று காணி, உரிய நஷ்டஈடு அல்லது நிரந்தர வாழ்வாதார திட்டங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதும் கவலைக்கிடமான விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த பிரச்சினையில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு நீதியான தீர்வை வழங்க வேண்டும் என்றும், மீனவர்கள் பயன்படுத்தி வந்த கடற்கரை வீதியை மீண்டும் திறந்து வைப்பதோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு அல்லது மாற்று காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களின் வாழ்வாதாரத்தையும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்றும் இம்ரான் மஹரூப் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now