New Updates! Fresh news just arrived.

அம்பாறை விவசாயிகள் செலுத்திய 63 கோடி ரூபாய் உரம் இன்னும் ...

News

அம்பாறை விவசாயிகள் செலுத்திய 63 கோடி ரூபாய் உரம் இன்னும் வழங்கப்படவில்லை: பாராளுமன்றத்தில் எம்.எஸ். உதுமாலெப்பை எம்.பி கவலை வெளியீடு!

May 21, 2026 4:37 pm
அம்பாறை விவசாயிகள் செலுத்திய 63 கோடி ரூபாய் உரம் இன்னும் வழங்கப்படவில்லை: பாராளுமன்றத்தில் எம்.எஸ். உதுமாலெப்பை எம்.பி கவலை வெளியீடு!
அம்பாறை மாவட்ட விவசாயிகள் உரம் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 63 கோடி ரூபாய் தொகையை முன்கூட்டியே செலுத்தியிருந்த போதிலும், இதுவரை உரங்கள் முழுமையாக வழங்கப்படாததால் விவசாய நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் எம்.எஸ். உதுமாலெப்பை எம்.பி தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (19) நடைபெற்ற நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சின் உள்நாட்டு வருவாய் (திருத்தச்) சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், நாட்டின் முக்கிய நெல் உற்பத்தி மாவட்டங்களில் ஒன்றான அம்பாறையில் விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உரம் போன்ற விவசாய உள்ளீடுகள் தாமதமாக கிடைப்பது பாரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டினார்.

தேசிய ரீதியில் சுமார் 22 சதவீத நெல் உற்பத்தி அம்பாறை மாவட்டத்திலிருந்து கிடைக்கப்பெறுவதாக தெரிவித்த அவர், நீண்டகாலமாக நீரில் மூழ்கியுள்ள 12,500 ஏக்கர் காணிகளுக்கான சம்புக்களப்பு – கரைவாகுப்பற்று வடிச்சல் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அம்பாறை மாவட்டத்தின் நெல் உற்பத்தி 30 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்ட விவசாயிகள் உரம் பெற்றுக்கொள்ள மொத்தமாக 63 கோடி ரூபாயை செலுத்தியுள்ளதாகவும், இருந்தபோதிலும் உரங்கள் உரிய நேரத்தில் கிடைக்காததால் விவசாய பணிகளை முன்னெடுக்க முடியாமல் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்மாந்துறை, மல்வத்தை, இறக்காமம், அட்டாளைச்சேனை, கோமாரி, தம்பிலுவில், அக்கரைப்பற்று, நிந்தவூர், சாய்ந்தமருது, காரைதீவு, பொத்துவில் உள்ளிட்ட பல பிரதேச விவசாயிகள் கோடிக்கணக்கான தொகைகளை செலுத்தியுள்ளதாகவும் அவர் சபையில் விவரித்தார்.

அம்பாறை மாவட்டத்திற்கு மொத்தமாக 15,650 டொன் உரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 6,311 டொன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் 9,339 டொன் உரம் இன்னும் வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும், அதில் 1,145 டொன் உரத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

எனினும், மீதமுள்ள 9,194 டொன் உரம் இன்னும் விவசாயிகளுக்கு கிடைக்காத நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்ட அமைச்சுகள் உடனடியாக தலையிட்டு அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கான உர விநியோகத்தை தடையின்றி விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், கடந்த அரசுகளின் காலத்தில் 350 ரூபாவுக்கு உரம் வழங்கப்பட்டதுடன் அவை முறையாக விநியோகிக்கப்பட்டதாகவும், தற்போதைய உர விநியோக முறைமையில் தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகள் காரணமாக உர விநியோகத்தில் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் உர கொள்கையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக விவசாயிகள் தேசிய மட்டத்தில் போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்ற வரலாறையும் மறந்துவிடக் கூடாது என எம்.பி மேலும் தெரிவித்தார்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now