New Updates! Fresh news just arrived.

மின் கட்டண திருத்தம் குறித்த இறுதி தீர்மானம் அடுத்த வாரம்...

News

மின் கட்டண திருத்தம் குறித்த இறுதி தீர்மானம் அடுத்த வாரம்

November 5, 2026 9:24 am
மின் கட்டண திருத்தம் குறித்த இறுதி தீர்மானம் அடுத்த வாரம்
நடப்பு ஆண்டின் இறுதி காலாண்டிற்கான முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் குறித்த வாய்மொழி மூலமான பொதுமக்கள் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றைய தினம் (05) இடம்பெறவுள்ளதாக அதன் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார்.

இவ்வாண்டின் இறுதி காலாண்டிற்காக 2.88% ஆல் மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு தேசிய மின்கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனத்தினால் (National System Operator) பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த கோரிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மீளாய்விற்கு அமைய, மின் கட்டணத்தை 1.46% ஆல் அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது.

இருப்பினும், இன்றைய தினம் பெறப்படும் பொதுமக்களின் கருத்துகளுக்குப் பின்னர் முன்வைக்கப்படும் யோசனைகள் மற்றும் கருத்துகளைக் கருத்தில் கொண்டு, முன்மொழியப்பட்டுள்ள மின் கட்டணம் தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் மேலும் தெரிவித்தார்.

"இங்கு முன்வைக்கப்படும் யோசனைகள் மற்றும் கருத்துகளைக் கருத்தில் கொண்டு திறைசேரியில் ஆணைக்குழு ஆரம்ப கட்ட மீளாய்வுப் பணிகளை முடித்து, அது தொடர்பான அவதானிப்புகளுடன் கூடிய ஆலோசனைப் பத்திரிகையையும் பொதுமக்களின் கலந்தாலோசனைக்காக வெளியிட்டது. அந்த பொதுமக்களின் கலந்தாலோசனைக்கான வாய்மொழி கருத்து தெரிவிக்கும் சந்தர்ப்பம் இன்றைய தினம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.

இதில் கருத்து தெரிவிப்பதற்காக பல்வேறு நுகர்வோர் குழுக்கள் மற்றும் மின்சாரத் துறையின் பல்வேறு அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 40க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கான இந்த சந்தர்ப்பம் காலை 9.00 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.00 மணிக்கு முடிவடையும். இங்கு முன்வைக்கப்படும் யோசனைகள் மற்றும் கருத்துகளைக் கருத்தில் கொண்டு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதி முடிவை எடுக்கும். அந்த முடிவு நவம்பர் இரண்டாவது வாரம் அளவில் அறிவிக்கப்படவுள்ளது." என்றார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now