New Updates! Fresh news just arrived.

அம்பாறையில் கிராம மக்களை இலக்கு வைக்கும் நிதி மோசடிகள்: ம...

News

அம்பாறையில் கிராம மக்களை இலக்கு வைக்கும் நிதி மோசடிகள்: மத்திய வங்கி அதிகாரிகள் விழிப்புணர்வு நிகழ்வு!

July 17, 2026 12:46 pm
அம்பாறையில் கிராம மக்களை இலக்கு வைக்கும் நிதி மோசடிகள்: மத்திய வங்கி அதிகாரிகள் விழிப்புணர்வு நிகழ்வு!
அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிதி மோசடிகளிலிருந்து கிராம மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்வு அம்பாறை தலைமையக பொலிஸ் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

அம்பாறை பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் நேரடி வழிகாட்டலில், 'மகா பந்துவ' அமைப்பின் ஒத்துழைப்புடன் இந்த விழிப்புணர்வுத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பிரதம உரையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்ல, அம்பாறை மாவட்டத்தில் பரவலாக இடம்பெற்று வரும் திட்டமிட்ட நிதி மோசடிகள் மற்றும் போலி முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விரிவான விளக்கமளித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், "குறித்த நிதி மோசடி வலையமைப்பிற்குள் அம்பாறை நகர மக்கள் மட்டுமல்லாது, பல கிராமப்புற மக்களும் வீழ்ந்துள்ளனர். மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், படித்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறைப் பணியாளர்கள் கூட இவ்வாறான மோசடிக்காரர்களிடம் பெருந்தொகை பணத்தை இழந்து ஏமாந்துள்ளனர். இந்த அபாயகரமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தி, எமது கிராமத்து மக்களை மோசடிக்காரர்களிடமிருந்து பாதுகாப்பதே எமது பிரதான நோக்கமாகும்" எனக் குறிப்பிட்டார்.


இலங்கை மத்திய வங்கியின் நிதி ஒழுங்குமுறை மற்றும் அமுலாக்கல் துறையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு, சட்டவிரோத பிரமிட் திட்டங்கள் மற்றும் இணையவழி நிதி மோசடிகளிலிருந்து எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்து தெளிவுபடுத்தினர்.

இந்நிகழ்வில் மத்திய வங்கியின் நிதி துறையின் பிரதிப் பணிப்பாளர் அருணா விஜயசிறி, உதவிப் பணிப்பாளர் கிஹந்த சில்வா, திருகோணமலை பிராந்திய முகாமையாளர் கே. பிரபாகரன் மற்றும் பிராந்திய முகாமையாளர் டி. சஞ்சீவன் ஆகியோர் கலந்துகொண்டு விளக்கவுரைகளை ஆற்றினர்.

மேலும், அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நுவன் தண்டநாராயணா, அம்பாறை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் உபுல் இந்திக்க குணவர்தன உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளும், பெருமளவிலான சமூகப் பிரதிநிதிகளும், சிவில் சமூகத் தலைவர்களும் இந்த விழிப்புணர்வு மாநாட்டில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now