New Updates! Fresh news just arrived.

மக்களின் காணிகளினை விடுவிக்க வனவள திணைக்களம் மறுப்பதினை ஏ...

News

மக்களின் காணிகளினை விடுவிக்க வனவள திணைக்களம் மறுப்பதினை ஏற்க முடியாது: வடக்கு ஆளுநர்!

February 25, 2026 8:39 pm
மக்களின் காணிகளினை விடுவிக்க வனவள திணைக்களம் மறுப்பதினை ஏற்க முடியாது: வடக்கு ஆளுநர்!
மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார நிலங்களுக்கான ஆவணங்கள் இல்லையென்பதினை காரணங்காட்டி, அக்காணிகளினை விடுவிக்க வனவளத் திணைக்களம் மறுப்புத் தெரிவிப்பதினை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மாவட்டச் செயலகத்தினால் பரிந்துரைக்கப்படும் காணிகளினை வனவளத் திணைக்களம் முழுமையாக விடுவிக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது, குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமாகிய கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் குழுவின் இணைத் தலைவரும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநருமாகியா நா.வேதநாயகன் ஆகியோரினுடைய இணைத் தலைமையில் இன்று புதன்கிழமை(25) காலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத் திறன் அபிவிருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தின் ஆரம்பத்தில் வரவேற்புரையாற்றிய கிளிநொச்சி மாவட்டச் செயலாளரான சு.முரளிதரன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் மணல் தேவையினை பூர்த்தி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டிருக்கும் துரித நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

கல்மடுக் குளத்தில் இருந்து பெறப்பட்டுச் சுத்திகரிக்கப்பட்ட மணல், தற்போது கரைச்சிப் பிரதேச சபையினூடாக மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

மேலும், கடந்த 'டித்வா' பேரிடரின் பின்னர் இரணைமடுக் குளத்தினுடைய மேலதிக நீர் வெளியேறிய ஆற்றுப் பகுதிகள், அக்கராயன் மற்றும் கல்லாறு ஆகிய ஆற்றுப் பகுதிகளில் குவிந்திருக்கும் மணலை பிரதேச சபைகள் ஊடாகச் சேகரித்து மக்களுக்கு விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கிளிநொச்சியிலுள்ள 5 குளங்களில் மண்ணைக் கழுவுவதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாக சுமார் 15,000 கியூப் மணல் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனூடாக இரு மாவட்டங்களினதும் எதிர்கால மணல் தேவையினை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் இ.சந்திரசேகர், நடப்பு ஆண்டில் மாவட்டத்தினுடைய அபிவிருத்திக்காகப் பல்வேறு நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறவுள்ள நிலையில், அவற்றினை வினைத்திறனுடன் செலவிடுவதற்கான போதிய கால அவகாசம் காணப்படுவதினால், அபிவிருத்திப் பணிகளினை மிகச் சிறப்பாகவும் துரிதமாகவும் முன்னெடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினுடைய அனுமதிக்கான பல்வேறு விடயங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. பன்முகப்படுத்தப்பட்ட வரவு–செலவுத் திட்ட நிதி, மீள்குடியேற்ற அமைச்சின் மூலமான வீட்டுத் திட்டங்கள், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள், புனரமைக்கப்பட வேண்டிய பாலங்களினுடைய முன்னுரிமைப் பட்டியல், இடர் முகாமைத்துவத் திட்டம் மற்றும் சமூக சக்தி வறுமை ஒழிப்புத் திட்டம் ஆகியவற்றுக்கான அனுமதிகள் கோரப்பட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் இ.அருச்சுனா, பொ.கஜேந்திரகுமார் மற்றும் பிரதேச சபைகளினுடைய தவிசாளர்கள் ஆகியோர் தமது எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

இதேவேளை, வன்னேரிக்குளம் சுற்றுலா அபிவிருத்தி, கௌதாரிமுனையில் காணி வழங்கல் மற்றும் பொருளாதார மத்திய நிலையக் கடைகள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களுக்குக் குழுவால் அனுமதி வழங்கி வைக்கப்பட்டது.

வனவளத் திணைக்களத்திடம் இருந்து 10,821 ஏக்கர் காணியினை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், வெறுமனே 1,088 ஏக்கர் காணியினை மாத்திரமே விடுவிக்க வனவளத் திணைக்களம் பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து சுட்டிக்காட்டிய மாவட்டச் செயலாளர், கோரப்பட்ட முழுமையான 10,821 ஏக்கர் காணியினையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், அக்கோரிக்கைக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஏகமனதாக அனுமதி வழங்கியதுடன், வனவளத் திணைக்களத்தினால் விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பான முழுமையான விவரங்களினை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியினை பெற்றுச் சமர்ப்பிக்குமாறு அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தின் எதிர்காலக் குடிநீர்த் தேவையினை கருத்தில்கொண்டு, இரணைமடுக் குளத்தில் இருந்து குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதியும் ஒருங்கிணைப்புக் குழுவினால் வழங்கப்பட்டது. அத்தோடு, கிளிநொச்சி நகர்ப்புறக் குளங்களின் ஒதுக்கீட்டுக் காணிகளினை ஆக்கிரமித்துள்ளவர்களைச் சட்டபூர்வமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவினை இரண்டாகப் பிரிப்பதற்கும், சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளினைப் பிரித்து மீளமைப்பதற்கும் ஒருங்கிணைப்புக் குழு அனுமதி வழங்கியது.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகளினை ஒழுங்குபடுத்துவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அருச்சுனா இராமநாதன் ஆகியோரும், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், அமைச்சுக்களினுடைய செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச சபைகளினுடைய தவிசாளர்கள் மற்றும் சமூக அமைப்புக்களினுடைய பிரதிநிதிகள், பாதுகாப்புத் தரப்பினர் எனப் பலரும் கலந்துகொண்டிருத்தனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now