New Updates! Fresh news just arrived.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு ஒத்திவைப்ப...

News

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு ஒத்திவைப்பு!

July 8, 2026 3:40 pm
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு ஒத்திவைப்பு!
அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக, இந்த வழக்கை செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (08) கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கையில், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு, அதன் சுருக்கக் கோப்புகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.

அந்த சந்தர்ப்பத்தில், சிரேஷ்ட அரச சட்டத்தரணி சமதரி பியசேன நீதிமன்றத்தில் விபரங்களை முன்வைத்து, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிக்கப்பட்டு கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதால், சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு ஒரு திகதியை வழங்குமாறு கோரினார்.

அதேவேளை, ரணில் விக்ரமசிங்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் விபரங்களை முன்வைக்கையில், இந்த வழக்குக்கு அடிப்படையாக அமைந்த மொத்தத் தொகையில் பாதியளவு வாகனங்களுக்காகவே செலவிடப்பட்டுள்ளதாகப் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.

எனினும், தனது கட்சிக்காரருக்கு பிரித்தானிய அரசாங்கமே வாகனங்களை வழங்கியதாகவும், அது தொடர்பாகப் பிரித்தானிய அரசாங்கம் பின்பற்றிய நடைமுறைகள் அடங்கிய ஆவணமொன்றை அரச சட்டத்தரணியிடம் ஒப்படைத்த ஜனாதிபதி சட்டத்தரணி, இது குறித்தும் விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொண்டார்.

முன்வைக்கப்பட்டிருந்த விபரங்களைப் பரிசீலித்த நீதவான், குறித்த முறைப்பாட்டை மீண்டும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினம் சட்டமா அதிபரினுடைய நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் நீதவான் அரச சட்டத்தரணிக்கு உத்தரவிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிக அரசுப் பணத்தைத் தனிப்பட்ட பயணத்திற்காகச் செலவிட்டதன் மூலம் அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது செயலாளராகக் கடமையாற்றிய சமன் ஏக்கநாயக்க ஆகியோர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now