New Updates! Fresh news just arrived.

நான்கு வீதி விபத்துகள்: பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் உய...

News

நான்கு வீதி விபத்துகள்: பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் உயிரிழப்பு!

September 9, 2026 8:12 am
நான்கு வீதி விபத்துகள்: பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் உயிரிழப்பு!
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (08) இடம்பெற்ற நான்கு தனித்தனி வீதி விபத்துகளில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் இரண்டு இளைஞர்களும் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெப்பெட்டிபொல, கொஸ்லந்த, கொட்டவில மற்றும் மாத்தறை பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலேயே இந்த விபத்துகள் பதிவாகியுள்ளன.

கெப்பெட்டிபொல பொலிஸ் பிரிவில், நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் அளகொலகால பகுதியில் முதலாவது விபத்து இடம்பெற்றுள்ளது. நுவரெலியா நோக்கி சென்ற முச்சக்கரவண்டி, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி பயணி வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கொஸ்லந்த - வெல்லவாய வீதியின் உடுமுல்ல பகுதியில் மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது. வெல்லவாய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்திசையில் வந்த டிப்பர் லொறியுடன் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.

பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் சாரதி கொஸ்லந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் அல்தும்முல்ல பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவரும், கொஸ்லந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட்டும் ஆவார்.

மூன்றாவது விபத்து கொட்டவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுல்தானாகொட வீதியில் இடம்பெற்றுள்ளது. சுல்தானாகொட நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து வீதியில் கவிழ்ந்துள்ளது.

இதில் காயமடைந்த சாரதி மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சுல்தானாகொட பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாத்தறை பொலிஸ் பிரிவில் மாத்தறை - அக்குரஸ்ஸ வீதியின் கொட்டகம அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் நான்காவது விபத்து இடம்பெற்றுள்ளது.

மாத்தறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிர்திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது. மோதலின் தாக்கத்தில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பேருந்தின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் காயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் பிட்டபெத்தர பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நான்கு விபத்துகள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now