New Updates! Fresh news just arrived.

எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

News

எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

May 21, 2026 9:40 am
எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
எரிபொருள் விலைகளை குறைக்கக் கூடிய சாத்தியமில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு எதிர்வரும் ஜூலை மாதம் வரை போதுமானதாக இருக்கும் எனவும், செப்டம்பர் மாதம் வரையிலான எரிபொருள் இறக்குமதிக்கு ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த விடயங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய உலகளாவிய யுத்த சூழ்நிலை காரணமாக எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், வழக்கமான நடைமுறையின் கீழ் மாதந்தோறும் மேற்கொள்ளப்படும் விலை திருத்தத்தைத் தவிர, மேலதிகமாக எரிபொருள் விலையை திருத்துவதற்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் கடந்த மார்ச் மாத இறுதியிலும் ஏப்ரல் மாதத்திலும் காணப்பட்ட விலைகளுடன் ஒப்பிடுகையில் தற்போது விலை சற்று குறைந்துள்ளது. எனினும், மே 13ஆம் திகதி நிலவரப்படி டீசல் பேரல் ஒன்றின் விலை 154 டொலராகவே காணப்பட்டது என தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு முன்னர் உலக சந்தையின் சுட்டெண் விலை (Index Price) 70, 80, 90 ஆகிய எல்லைகளிலேயே காணப்பட்டது. அப்போது சராசரியாக 80 டாலராக இருந்த விலை, தற்போது கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்திற்கு முன்னர் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 63 முதல் 69 டொலர் வரையிலான எல்லையிலேயே இருந்தது. எனினும் இம்மாதத்தில் அது 110 டொலராக காணப்படும் விலை அடுத்த இரண்டு மாதங்களில் 100 டொலருக்கு அதிகமாகவே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


உலக சந்தையில் விலை இரு மடங்காக உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டில் நாம் விலையை இரு மடங்கு அதிகரிக்கவில்லை. எனவே, வரும் மாதங்களில் உலக சந்தை விலை குறைந்தாலும், அது தற்போதைய உள்நாட்டு விலை மட்டத்திற்கு இணையாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதனால், அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் விலையைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வழங்கப்பட்டு வரும் எரிபொருள் மானியங்களை படிப்படியாகக் குறைத்து, தற்போதைய உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப எரிபொருளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கூட்டுத்தாபனம் ஆலோசித்து வருவதாகவும் நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now