New Updates! Fresh news just arrived.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்...

News

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி: நீதிமன்றத்தை நாடவுள்ளதாக டாக்டர் கே.எல்.எம்.றயீஸ் அறிவிப்பு!

January 11, 2026 3:05 pm
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி: நீதிமன்றத்தை நாடவுள்ளதாக டாக்டர் கே.எல்.எம்.றயீஸ் அறிவிப்பு!
பாதுகாப்பு அமைச்சினுடைய செயலாளரினால் கடந்த ஜனவரி 06ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கையினை எடுக்கவுள்ளதாக 'சுப்பர் முஸ்லிம்' அமைப்பினுடைய தலைவர் மருத்துவர் கே.எல்.எம். ரயீஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையினை மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"கடந்த ஜனவரி 06ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் எனது பெயர் சேர்க்கப்பட்டமை குறித்து, ஒரு சுருக்கமான மற்றும் பொறுப்பான விளக்கத்தினை வழங்க விரும்புகின்றேன்.

நான் எந்தவித வன்முறை, தீவிரவாத அல்லது சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபட்டதில்லை என்பதையும், பயங்கரவாதம் தொடர்பான எந்தக் குற்றச்சாட்டிலும் எனக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதோ அல்லது தண்டனை விதிக்கப்பட்டதோ இல்லை என்பதையும் தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளிப்படையான சில உண்மைத் தவறுகள் காணப்படுகின்றன.

அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் “Super Muslim” என்னும் பெயரில் இலங்கையில் எந்தவொரு அமைப்பும் இல்லை.எனவும் “சஹாபி தரீகா” என்கின்ற சொல், நபியவர்களின் தோழர்களான சஹாபாக்களினுடைய வழிமுறையினை மட்டுமே குறிக்கின்றது. இது ஒரு அமைப்போ அல்லது தீவிரவாதக் குழுவோ அல்ல; மாறாக இது பொதுவான இஸ்லாமிய நம்பிக்கையினை பிரதிபலிக்கின்றது.

வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு விபரங்களிலும் தவறுகள் உள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் ஒன்று எனக்குச் சொந்தமானதல்ல. மேலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள இணையத்தளம் அல்லது ஒன்லைன் இணைப்புடன் எனக்கு எந்தவிதத் தொடர்பும் அல்லது அறிவும் இல்லை. இவ்வாறான தவறுகள் தீவிரமாகக் கவலைக்குரியவையாகும்.

இந்த நிலைமை தவறான தகவல்கள் அல்லது ஆள் அடையாளக் குழப்பம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துக்கொள்கிறேன். இது எனது தரப்பில் இருந்து முன்னெடுக்கப்பட்ட எந்தச் செயல்பாட்டினாலும் ஏற்பட்டதல்ல.

குறித்த விடயம் எனது நற்பெயருக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் மற்றும் தொழில்முறை நடவடிக்கைகளுக்கும் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, நான் முறையான சட்ட நடைமுறைகளின் ஊடாக சட்ட நிவாரணங்களினை நாடியுள்ளேன். அத்தோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் முறையான மனுக்களினை சமர்ப்பித்துள்ளேன்.

நான் நாட்டின் சட்டத்தையும், அரசியலமைப்பையும், இலங்கை நீதித்துறையையும் முழுமையாக மதிக்கிறேன் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். எனது விளக்கங்களினையும் ஆவணங்களினையும் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்து, அதன் தீர்ப்பினை மரியாதையுடன் எதிர்பார்க்கவுள்ளேன்.

ஆகவே, தேவையற்ற ஊகங்களினை தவிர்த்து, சட்ட நடைமுறைகளுக்கு மரியாதையினை செலுத்துமாறு பொதுமக்களினையும் ஊடகங்களினையும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்" என அவர் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now