New Updates! Fresh news just arrived.

‘GENESIS – 2026’ புத்தாக்கக் கண்காட்சி மற்றும் புத்தக வெள...

News

‘GENESIS – 2026’ புத்தாக்கக் கண்காட்சி மற்றும் புத்தக வெளியீட்டு நிகழ்வு!

September 22, 2026 4:51 pm
‘GENESIS – 2026’ புத்தாக்கக் கண்காட்சி மற்றும் புத்தக வெளியீட்டு நிகழ்வு!
பாடசாலை மாணவர்களிடையே புத்தாக்கச் சிந்தனைகளினை தூண்டும் கண்காட்சிகளை நடத்துவதினை நான் வரவேற்கின்றேன். மாணவர்களினுடைய புத்தாக்கச் சிந்தனைகளின் வெளிப்பாடு, அவர்கள் எதிர்காலத்தில் உயர்ந்த பதவிகளுக்கு வரும்போது ஆளுமையுள்ளவர்களாகவும், துரிதமாகவும் புத்தாக்கமாகவும் சமூக நலன் சார்ந்தும் முடிவெடுக்கக்கூடியவர்களாகவும் மிளிர்வதற்கான வாய்ப்பாக அமையும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் ‘GENESIS – 2026’ புத்தாக்கக் கண்காட்சி மற்றும் புத்தக வெளியீட்டு நிகழ்வு இன்று (22) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர், கண்காட்சியை முழுமையாகப் பார்வையிட்டதுடன், மாணவர்களின் புத்தாக்கப் படைப்புகளைப் பாராட்டினார்.

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் அதிபர் செல்வி கிறேஸ் தேவதாயினி தேவராஜா அவர்களின் தலைமையில் நடைபெறும் இப்புத்தாக்கக் கண்காட்சி செப்ரெம்பர் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களும் பாடசாலை வளாகத்தில் இடம்பெறுகிறது. யாழ்ப்பாண வலயக் கல்வி அலுவலகத்தின் ஆசிரியர் ஆலோசகர் திருமதி கே.வனிதா சிறப்பு விருந்தினராகவும் அழைக்கப்பட்டிருந்தார்.

கண்காட்சியினை பார்வையிட்ட ஆளுநர், மாணவர்கள் தமது சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத் திறன்களினை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கியிருந்த பல்வேறு படைப்புகளினை நேரில் பார்வையிட்டு, அவை தொடர்பில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போது உரையாற்றிய ஆளுநர், 'எங்கு தலைமைத்துவம் சிறப்பாக அமைகின்றதோ, அங்கு வளர்ச்சிக்கான பாதை தென்படும்' எனக் குறிப்பிட்டார். ஒரு பாடசாலைக்கு சிறந்த அதிபர் கிடைத்தால் அந்தப் பாடசாலை வளர்ச்சியை நோக்கிச் செல்லும்; அதேவேளை பொருத்தமற்ற தலைமைத்துவம் காணப்படும் நிலையில் அதன் வளர்ச்சி பாதிக்கப்படக்கூடும் எனவும் தெரிவித்தார்.

தாம் மாவட்டச் செயலராகக் கடமையாற்றி ஓய்வுபெற்ற காலத்திலும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் வளர்ச்சி தொடர்பில் கவனம் செலுத்தியிருந்ததாகக் குறிப்பிட்ட ஆளுநர், தற்போது அதிபராகக் கடமையாற்றும் செல்வி கிறேஸ் தேவதாயினி தேவராஜா அவர்கள் முன்னர் வலயக் கல்விப் பணிப்பாளராகத் தமது கூட்டங்களில் பங்கேற்றவர் எனவும், சிறந்த ஆளுமையைக் கொண்டவர் எனவும் குறிப்பிட்டார். இவ்வாறான புத்தாக்கக் கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளினூடாக மாணவர்களினை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அவர் தொடர்ந்து செயற்படுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மாணவர்கள் பாடப்புத்தகக் கல்வியில் மாத்திரம் தங்களை மட்டுப்படுத்திக்கொள்ளக் கூடாது எனத் தெரிவித்த ஆளுநர், இணைப்பாடவிதானச் செயற்பாடுகளும் கல்வியும் இணைந்தால்தான் மாணவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சியடையும் எனக் குறிப்பிட்டார்.

புத்தகக் கல்வியால் மாத்திரம் உயர்ந்த ஒருவர் சமூகத்துக்கு உதவும் மனப்பான்மையைப் பெறுவார் எனக் கூற முடியாது எனத் தெரிவித்த அவர், இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்கள் சிறந்த ஆளுமையுடனும் தலைமைத்துவப் பண்புடனும் வளர்வதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறு வளர்ந்துவரும் மாணவர்கள் எதிர்காலத்தில் உயர்ந்த பதவிகளுக்கு வருகின்றபோது, துரிதமாகவும், புத்தாக்கமாகவும், சமூக நலன் சார்ந்தும் முடிவுகளினை மேற்கொள்ளக்கூடியவர்களாக உருவாக முடியும் என்றும் குறிப்பிட்ட ஆளுநர், அவ்வாறான ஆளுமையோடு, மாணவர்கள் வளர வேண்டும் எனவும் வாழ்த்துத் தெரிவித்தார்.

நிகழ்வின் ஒரு பகுதியாக விருந்தினர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டதையடுத்து, புத்தக வெளியீடும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now