New Updates! Fresh news just arrived.

அரசு காணி அபகரிப்பு: நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளின...

News

அரசு காணி அபகரிப்பு: நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளினை கண்டித்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் முன்பாக அமைதிப் போராட்டம்!

April 20, 2026 7:45 pm
அரசு காணி அபகரிப்பு: நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளினை கண்டித்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் முன்பாக அமைதிப் போராட்டம்!
ஜே/420 கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த பொது மக்கள் ஒன்றிணைந்து, அரச காணி அபகரிப்புக்கு எதிராகவும், அதற்குத் துணைபோகும் அதிகாரிகளினை கண்டித்தும் அமைதி வழிப் போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் முன் முன்னெடுத்தனர்.

குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குடத்தனை வடக்கு மக்கள் காணி அபகரிப்பு மற்றும் துனை போகும் அரச அதிகாரிகளுக்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் முகமாக பல பதாகைகளினை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

குறித்த போராட்டத்தினுடைய நிறைவில் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னணி:
ஜே/420 கிராம அலுவலர் பிரிவிலுள்ள அரச காணியினை, கடந்த சில ஆண்டுகளாக புலம் பெயர் நாட்டில் வசித்து வருகின்ற நபர் ஒருவர், போலி உறுதிப் பத்திரங்கள் (கள்ள உறுதி) ஊடாக கையகப்படுத்தியுள்ளார்

குறித்த போலி ஆவணங்களினை பயன்படுத்தி, குறித்த காணியினை சுமார் 90 இலட்சம் ரூபாய்க்கும் அதிகத் தொகைக்கு அவர் விற்பனை செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அப்பகுதி கிராம முன்னேற்றச் சங்கம் (RDS) சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பே பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

இருப்பினும், பிரதேச செயலகத்தின் தரப்பில் இருந்து எவ்வித உத்தியோகபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

காணி ஆணையாளரினுடைய உத்தரவும் அதிகாரிகளின் மெத்தனமும்:
பிரதேச செயலகத்தினுடைய மந்தகதியிலான செயல்பாட்டை அடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் வடமாகாணக் காணி ஆணையாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்

மக்களின் கோரிக்கையினை ஏற்று உடனடியாகச் செயல்பட்ட காணி ஆணையாளர், குறித்த காணி அரச காணி என்பதினை உறுதிப்படுத்தியதோடு, இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பிரதேச செயலாளருக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.

ஆணையாளரினுடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும், பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர் மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் இதுவரைக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என குறித்த போராட்டக்காரர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

"அரசு காணியை தனியார் காணியாக மாற்றுவதற்காக அதிகாரிகள் ஆதாரங்களினை தேடுகின்றார்களா?" என ஆர்ப்பாட்டக்காரர்கள் கேள்வியினை எழுப்பியுள்ளனர்.

மக்களின் கோரிக்கை:
தமது குறைகளினை முறையிடச் செல்லும் பொதுமக்களினை மரியாதையற்ற முறையில் நடத்தும் பிரதேச செயலாளரினுடைய அணுகுமுறை குறித்தும் இதன்போது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:
போலி ஆவணங்கள் ஊடாக அரச காணியினை விற்பனை செய்த நபர் மீது உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கடமைகளினை செய்யத் தவறிய மற்றும் பொதுமக்களுக்குச் சேவைகளை செய்ய மறுக்கும் அதிகாரிகளினை உயர் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.

அரச காணிகளினை பாதுகாப்பதில் நிலவும் முறைகேடுகள் தொடர்பில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், போராட்டத்தினை தீவிரப்படுத்தப் போவதாகவும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now