New Updates! Fresh news just arrived.

அனோஜனை விடுவிக்க அரசாங்கம் இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வே...

News

அனோஜனை விடுவிக்க அரசாங்கம் இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலாநிதி அன்வர் எம். முஸ்தபா!

September 21, 2026 12:51 pm
அனோஜனை விடுவிக்க அரசாங்கம் இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும்:  கலாநிதி அன்வர் எம். முஸ்தபா!
சவூதி அரேபியாவில் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான எஸ். அனோஜனின் விடுதலைக்காக ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு, உச்சகட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா கோரிக்கை விடுத்துள்ளார்.

நபிகள் நாயகம் (ஸல்) குறித்து தான் வெளியிட்ட கருத்துக்காக அனோஜன் மன்னிப்பு கோரி இருக்கும் நிலையில், இவ்விடயத்தினை தண்டனை என்ற ஒரு கோணத்தில் மாத்திரம் அணுகாமல், இஸ்லாம் வலியுறுத்தியுள்ள மன்னிப்பு, கருணை, சமாதானம், சகோதரத்துவம் மற்றும் மனிதாபிமானம் ஆகிய அடிப்படைப் போதனைகளின் அடிப்படையில் அணுகுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் சமாதானத்தினையும் மனிதர்களுக்கிடையிலான நல்லுறவினையும் வலியுறுத்தும் மார்க்கமாகும். நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களினுடைய வாழ்க்கையில் மன்னிப்பு, பொறுமை மற்றும் கருணைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளமை இஸ்லாமிய வரலாற்றில் தெளிவாகக் காணப்படுகின்றது. ஆகவே, ஒருவர் தனது கருத்துக்காக மன்னிப்பு கோரியுள்ள சூழ்நிலையில், அவரது மனமாற்றத்தினையும் மனிதாபிமான நிலைமையினையும் கருத்திற்கொண்டு கருணையுடன் அணுகுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

அனோஜனினுடைய தாயார் தனது மகனை மீண்டும் காண வேண்டும் என்கின்ற ஏக்கத்துடன் காத்திருக்கும் நிலையில், அவரது கண்ணீரினையும் குடும்பத்தின் துயரத்தினையும் கருத்திற்கொண்டு சவூதி அரேபிய அரசாங்கம் குறித்த விடயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்தோடு, ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு, வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவற்றினை ஒருங்கிணைத்து, அனோஜனின் விடுதலைக்கான அனைத்து சட்டரீதியான மற்றும் இராஜதந்திர வாய்ப்புகளினையும் பயன்படுத்த வேண்டும்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடுகளினை கடந்து ஒன்றிணைந்து ஜனாதிபதியினை சந்தித்து, குறித்த விடயத்தில் அவசர நடவடிக்கை எடுக்குமாறு கோருவதும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் இன, மத அல்லது அரசியல் பிரச்சினையாகப் பார்க்கப்படாமல், “அனோஜன் ஒரு இலங்கைப் பிரஜை” என்னும் அடிப்படையிலும், ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாகவும் அணுகப்பட வேண்டும். வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களினுடைய பாதுகாப்பு மற்றும் உரிமைகளினை பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் பொறுப்புடனும் இது தொடர்புபட்டுள்ளது.

இலங்கையின் பல்வேறு இன, மத சமூகங்களுக்கிடையே ஒற்றுமையினையும் நல்லிணக்கத்தினையும் கட்டியெழுப்ப வேண்டிய காலகட்டத்தில், அனோஜன் விடயத்தினை மனிதாபிமான அணுகுமுறையுடன் கையாள்வது சமூக நல்லிணக்கத்திற்கும் வலுசேர்க்கும்.

அனோஜனினுடைய விடுதலை அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல; ஒரு இலங்கைப் பிரஜை பாதுகாப்பாக நாடு திரும்புவதினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் முழு நாட்டிற்கும் மகிழ்ச்சியினை தரும். மன்னிப்பு, கருணை மற்றும் சமாதானத்தின் அடிப்படையில் குறித்த விடயத்திற்கு ஒரு மனிதாபிமானத் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றும் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now