New Updates! Fresh news just arrived.

இஸ்ரேல் ‘மொசாட்’ வலையில் மருத்துவர் சுகுணன் விழுந்துவிட்ட...

News

இஸ்ரேல் ‘மொசாட்’ வலையில் மருத்துவர் சுகுணன் விழுந்துவிட்டாரா?: முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் சந்தேகம்!

August 16, 2026 1:52 pm
இஸ்ரேல் ‘மொசாட்’ வலையில் மருத்துவர் சுகுணன் விழுந்துவிட்டாரா?: முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் சந்தேகம்!
இஸ்ரேலினுடைய ‘மொசாட்’ உளவு அமைப்பு கிழக்கு மாகாணத்தில் பொத்துவிலிலும், நாட்டினுடைய பல நகரங்களிலும் மீண்டும் கால் ஊன்றி வருகின்றதா என்னும் சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம். ஹரீஸ், மருத்துவர் கு.சுகுணன் அதன் வலையில் விழுந்து செயல்படுகின்றாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனையில் சனிக்கிழமை (15) இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே இருந்த பரஸ்பர நட்பையும் சகோதரத்துவத்தினையும் சீர்குலைக்க ‘மொசாட்’ செய்த வேலையே காரைதீவு சந்தியில் இரு சமூகங்களினையும் பிரித்தமையாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், அன்று ஆயுதமேந்திய சிலர் எடுத்த முடிவுகள் தமிழ் மக்களினுடைய விடுதலைப் போராட்டத்திற்கே பாரிய சவாலாக அமைந்ததினை நினைவூட்டினார்.

தற்போது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்டிருந்த ஒன்பது முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் தமது மத மற்றும் கலாசார ஆடையோடு கடமையைப் பொறுப்பேற்க அனுமதிக்கப்படாத விவகாரத்தில், மருத்துவர் சுகுணன் அவ்வாறான ஒரு பின்னணியில் செயல்படுகின்றாரா எனவும் சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கல்முனைப் பிராந்தியத்தில் உருவெடுத்திருக்கும் குறித்த சர்ச்சை தமிழ்–முஸ்லிம் ஐக்கியத்தினை விரும்பும் அனைவருக்கும் பெரும் கவலையளிப்பதாகத் தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ், தமிழ் அரசியல் தலைமைகள் உடனடியாக இதில் தலையிட்டுச் சுமுகமான தீர்வைக் காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இது தொடர்ப்பில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய முன்னாள் எம்பிக்களான மனோ கணேசன், இரா.சாணக்கியன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன் தொலைபேசியில் கலந்துரையாடி, சமூக நல்லிணக்கத்தினை கருத்திற் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

கல்முனை மண்ணில் கடற்கரைப் பள்ளிவாசல் விழாக்கள் மற்றும் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயத்தின் உற்சவங்களில் இரு சமூகத்தினரும் பரஸ்பரம் பங்கேற்கும் நீண்டகால நல்லிணக்க வரலாறு உள்ளதினை சுட்டிக்காட்டிய அவர், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளினை மீறி எந்தவொரு அரச நிறுவனமும் முடிவெடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

ஆகவே, சட்டநடவடிக்கைகளுக்குச் செல்வதற்கு முன்பாக அரசியல் மற்றும் நிர்வாக மட்டத்தில் குறித்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சரினுடைய கவனத்திற்கு இதனைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now