New Updates! Fresh news just arrived.

உயர்தர தொழிற்கல்விப் பாடம்: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின...

News

உயர்தர தொழிற்கல்விப் பாடம்: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

June 25, 2026 7:43 pm
உயர்தர தொழிற்கல்விப் பாடம்: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!
2026/ 2027 கல்வியாண்டிற்கான தரம் 12 உயர்தர தொழிற் பாடத்துறைக்கு புதிய மாணவர்களைச் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இப்பாடத்துறையில் மாணவர்களை அனுமதிக்கும் போது க.பொ.த. (சாதாரண தர) பரீட்சைப் பெறுபேறுகள் கருத்திற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு உயர்தரத்திற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கு தரம் 12/13 இல் பாடசாலைக் கல்வியைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அங்கீகாரத்துடனான தொழிற்தகைமைகளை (NVQ Level 4) பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படும்.

2025(2026) ஆம் ஆண்டு அல்லது கடந்த 03 வருடங்களுக்குள் க.பொ.த. (சாதாரண தர) பரீட்சைக்குத் தோற்றிய ஒரு மாணவர், தொழிற் பாடத்துறையைக் கொண்டுள்ள பாடசாலையொன்றின் தரம் 12 இற்கு விண்ணப்பிக்க முடியும்.

அதற்கமைய, தரம் 12 இற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கு மென்திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்துறைகளை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மொடியுல்களை கற்கக்கூடியதாக இருக்கும்.

தரம் 13 இல் அம்மாணவர்கள் பொருத்தமான தொழிற்துறையொன்றின் NVQ 4 ஆம் மட்டப் பயிற்சிக்காக அரசாங்க தொழிற்பயிற்சி நிறுவனமொன்றுடன் பாடசாலையினாலேயே இணைக்கப்படுவர்.

இதன்போது, மாணவர்களுக்குத் தொழிற்பயிற்சி நிறுவனமொன்றில் மட்டுமன்றி, தொழில்புரியும் இடத்திலுமான பயிற்சிக்கான வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அதன்படி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், மோட்டார் வாகனத் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் பராமரிப்பு சேவைகள், மாணிக்கம் மற்றும் தங்க ஆபரணத் தொழில்நுட்பம், அழகுக்கலை, அரங்கேற்றக் கலைகள் உள்ளிட்ட கைவினைத்திறன்கள், உணவு உற்பத்தி, ஆடை வடிவமைப்பு, மின்சாரம் மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்பம், உலோகத் தயாரிப்பு, வெல்டிங் தொழில்நுட்பம், இயந்திரங்களை இயக்குதல், கட்டிட நிர்மாணத் துறை, உள்ளக வடிவமைப்பு, தோட்ட வடிவமைப்பு, விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில், நீரியல் வளத் தொழில்நுட்பம், விளையாட்டு, உயிர்காப்பு மற்றும் நீச்சல் கலை, வர்த்தகம் மற்றும் வழங்கல் போன்ற பல்வேறு துறைகளில் தொழிற் பயிற்சி வாய்ப்புகள் மாணவர்களுக்குக் கிடைக்கும்.

இப்பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு NVQ நிலை 4 சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன், அதன் மூலம் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு தொழில்களுக்குச் செல்ல முடிவதுடன், உயர் கல்வி அல்லது முயற்சியாண்மைத் துறையினுள்ளும் பிரவேசிக்க முடியும்.

உயர்தர தொழிற் பாடத்துறையினுள் பிரவேசிப்பதற்கான விண்ணப்பப் படிவம், விண்ணப்பிக்கக்கூடிய பாடசாலைகளின் விபரம் மற்றும் தொழிற்பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய துறைகள் உள்ளிட்ட தகவல்கள் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் விசேட அறிவித்தல்களின் கீழ் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளைப் பொருட்படுத்தாது மாணவர்களுக்குப் பதின்மூன்று வருடக் கல்வியை உறுதிப்படுத்தும் நோக்கோடு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் இப்பாடத்துறை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

அதற்கமைய, தாங்கள் அனுமதி பெற எதிர்பார்க்கும் பாடசாலையின் அதிபருக்கு 2026 ஜூலை 08 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பப் படிவத்தை அனுப்பி வைத்தல் வேண்டும்.

அவ்விண்ணப்பப் படிவத்தைப் https://www.doenets.lk/ இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now