New Updates! Fresh news just arrived.

கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை: சிரேஸ்ட ...

News

கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை: சிரேஸ்ட சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் சமீம் தலைமையில் சத்திரசிகிச்சை வெற்றி!

November 15, 2026 6:14 pm
கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை: சிரேஸ்ட சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் சமீம் தலைமையில் சத்திரசிகிச்சை வெற்றி!
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாக, 70 வயதுடைய பெண் ஒருவருக்கு மிகச் சிக்கலான வயிற்றுச் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக கடந்த செவ்வாய்கிழமை (10) இடம் பெற்றது.

நீண்ட காலமாக உணவு உட்கொள்ள முடியாமல் கடுமையான சிரமங்களை எதிர்நோக்கி வந்த நோயாளிக்கு மேற்கொள்ளப்பட்ட மேல் இரைப்பை எண்டோஸ்கொப்பி (Upper Gastrointestinal Endoscopy) பரிசோதனையின் மூலம் வயிற்றில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இக்கட்டியானது வயிற்றிலிருந்து உணவு சிறுகுடலுக்குச் செல்லும் பாதையை அடைத்து, இரைப்பை வெளியீட்டுத் தடையை (Gastric Outlet Obstruction) ஏற்படுத்தியிருந்தது.

இதனைக் கருத்திற்கொண்டு, போர்ட் சான்றிதழ் பெற்ற சிரேஸ்ட சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ. டபிள்யூ. எம். சமீம் அவர்களின் தலைமையில், நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த sub total Gastrectomy with gastrojejunostomy (முழு வயிற்றை அகற்றி, உணவுக்குழாயை சிறுகுடலுடன் இணைக்கும்) சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது .

பொதுச் சத்திரசிகிச்சை, மேம்பட்ட சத்திரசிகிச்சை முறைகள் மற்றும் நவீன லேப்ராஸ்கோப்பிக் சத்திரசிகிச்சைகளில் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட நீண்ட அனுபவம் கொண்ட டாக்டர் சமீம் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் வைத்தியசாலைக் குழுவினரின் ஒத்துழைப்புடன் நோயாளி தற்போது பூரண குணமடைந்து ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்.

மேலும் இதன் போது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எல். எம்.றிபாஸ் நோயாளியைப் நேரில் சென்று பார்வையிட்டதுடன் தண்ணீரும் கொடுத்தார்.

உயர்தர சத்திரசிகிச்சைகள் அரச வைத்தியசாலையிலேயே இலவசமாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பது அம்பாரை மாவட்ட மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வரப்பிரசாதமாகும்.

பொது மக்களுக்கு நவீன மற்றும் உயர்தர சத்திரசிகிச்சைகளை அரச வைத்தியசாலைகளிலேயே பெற்றுக்கொள்ள முடியும் என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அமைந்துள்ளது.

இச்சாதனையில் பங்களித்த அனைத்து மருத்துவர்கள், மயக்க மருந்து வைத்திய நிபுணர்கள், தாதியர்கள் மற்றும் சத்திரசிகிச்சைக் குழுவினருக்குப் பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது.

(எம்.என்.எம்.அப்ராஸ்)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now