New Updates! Fresh news just arrived.

மானிப்பாய் பிரதேச சபையின் சட்டவிரோத செயல்: ஆளுநரின் உத்தர...

News

மானிப்பாய் பிரதேச சபையின் சட்டவிரோத செயல்: ஆளுநரின் உத்தரவையும் மீறி அதிகாரிகள் அராஜகம்!

April 25, 2026 12:56 pm
மானிப்பாய் பிரதேச சபையின் சட்டவிரோத செயல்: ஆளுநரின் உத்தரவையும் மீறி அதிகாரிகள் அராஜகம்!
மானிப்பாய் ஜே/139 கிராம சேவகர் பிரிவில் முறையற்ற வகையில் அனுமதி வழங்கப்பட்டு ஒரு இரண்டுமாடி கட்டடமானது அமைக்கப்பட்டு வருகின்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் கருத்து தெரிவிக்கையில்,

எல்லையையும் மீறி எங்களது காணிக்குள் இரண்டு மாடி கட்டடம் ஒன்று கடந்த வருடம் தொடக்கம் கட்டப்பட்டு வருகிறது. இது முறையற்ற வகையில் கட்டப்பட்டு வருகின்றது என்பதை நான் வலி தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையினர், உள்ளூராட்சி திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியோருக்கு அறிவித்தல் வழங்கினேன்.

இருப்பினும் மேற்குறித்த எந்த அரச நிறுவனங்களும் எமக்கு நீதியை வழங்காமல் அவர்களுக்காகவே கதைத்தனர். அதன்பின்னர் வடக்கு மாகாண ஆளுநரிடம் இது குறித்து முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் அவர் அந்த கட்டட நிர்மாண பணிகளை இடைநிறுத்துமாறு கடந்த நவம்பர் மாதம் எழுத்துமூலம் உத்தரவிட்டார்.

அதன்படி நிறுத்தப்பட்ட நிர்மாண பணிகள் தற்போது மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கு பிரதேச சபையினர் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நான் பிரதேச சபையினரிடம் வினவியவேளை சரியாக தான் அனுமதி வழங்கியதாகவும், விரும்பினால் என்னை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுமாறும் கூறினர்.

முறையற்ற கட்டடங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டியது உள்ளூராட்சி சபைகளின் கடமை. ஆனால் அவர்கள் முறையற்ற வகையில் அனுமதியையும் வழங்கிவிட்டு, எனது காணிக்குள் கட்டப்படும் கட்டடத்திற்கு எதிராக என்னை நீதிமன்றம் செல்லுமாறு கூறுகின்றார்கள்.

எமது காணிக்குள் வெட்டப்பட்ட குறித்த கட்டடத்திற்கான குழியானது மூடப்பட்டு, கட்டடத்தின் உரிமையாளரது காணிக்குள்ளே மீண்டும் குழி வெட்டப்பட்டு நிர்மாண பணிகள் இடம்பெறுவதை தமது தொழில்நுட்ப உத்தியோகத்தர் உறுதிப்படுத்தியதாக வலி தென்மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் சுபாகர் எழுத்துமூலம் கூறியுள்ளார்.

ஆனால் மீண்டும் நான் உப தவிசாளரை நேரில் தொடர்புகொண்டு வினவியபோது, தனக்கு அந்த கடிதம் குறித்து தெரியாது என்றும், தான் பார்க்காமல் கையொப்பம் இட்டதாகவும் பொறுப்பற்ற வகையில் கூறுகின்றார்.

எனது காணி எல்லைக்கு உள்ளே நின்ற பயன்தரும் மரங்களான தென்னைகள், மாமரங்கள், நாவல், வேம்பு போன்ற மரங்கள் அந்த கட்டடத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி வெட்டுமாறு பிரதேச சபையினர் அச்சுறுத்திய நிலையில் நாங்கள் அவற்றை வெட்டிவிட்டோம். அந்த வெட்டிய மரங்களும் தற்போது எமது காணிக்குள்ளேயே காணப்படுகின்றன. இப்போது அந்த மரங்களை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு கூறுகின்றார்கள். மரத்தினை தாங்கள் அச்சுறுத்தி வெட்டியமைக்கான ஆதாரம் இல்லாமல் செய்வதே அவர்களது நோக்கமாகும்.

மீண்டும் நாங்கள் உள்ளூராட்சி திணைக்களத்திடம் முறையிட்ட நிலையில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் வந்து வெளியாலேயே நின்று பார்த்தார். அதன்பின்னர் நாங்க கெஞ்சி கேட்டதால் தான் எமது காணிக்குள் வந்து பார்த்தார். பின்னர் இதையெல்லாம் விட்டுவிட்டு அந்த கட்டட வேலைகளை செய்ய அனுமதிக்குமாறு கூறினார். அவரும் நீதிக்காக குரல் கொடுக்கவில்லை.

முன்னர் நான் எனது காணிக்கு மதல் கட்டுவதற்கு பிரதேச சபையின் அனுமதிக்கு சென்றவேளை எல்லையில் இருந்து நான்கடி எனது காணியின் உள்ளே எடுத்து கட்டுமாறு கூறினார். வீதிக்கு அருகே இருக்கின்ற எல்லை என்றால் தான் அதுவும் ஒன்றரை அடி உள்ளே எடுத்து கட்டவேண்டும். ஆனால் இரண்டு காணிகளுக்கு நடுவே உள்ள எனது காணி எல்லைக்கான மதல் கட்டும்போது ஏன் நான்கடி உள்ளே எடுத்து கட்ட வேண்டும்? அந்த கட்டடம் அமைப்பதற்கு இடையூறு இல்லாமல் எனது காணியில் அந்த கட்டடத்தை அமைப்பதற்கே பிரதேச சபையின் செயலாளர் இவ்வாறு நாடகமாடியுள்ளார்.

பிரதேச சபையிடம் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கடந்த 15.02.2026 அன்று பல விடயங்களை கோரியிருந்தேன்.. இருப்பினும் அவர்கள் இதுவரை எமக்கு முறையான தகவல்களை தரவில்லை.

எமது ஜே/139 கிராம சேவகர் பிரிவுக்கான கிராம சேவகர் ரஜிதாவும் வந்து எங்களை அச்சுறுத்துகின்றார். எமது காணிக்குள் நிற்கின்ற ஏனைய மரங்களையும் வெட்டுமாறு எங்களிடம் கூறுமாறு தமது பிரதேச செயலர் தமக்கு கூறியதாக எங்களிடம் வந்து நச்சரிக்கிறார்.

குறித்த கட்டடம் முறையற்ற வகையில் கட்டப்படுவதை நகர் அபிவிருத்தி அதிகார சபையினர், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையினர் தற்போது ஒத்துக்கொள்கின்றனர். தமக்கு பிரச்சினை வரப்போகின்றது என்பதால் குறித்த கட்டடம் அமைக்கப்படுகின்றமை பிழையானது என உப தவிசாளர் சுபாகரும் தற்போது கூறியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநரின் உத்தரவையே மீறி சட்டவிரோத செயல்கள் இடம்பெறுகின்ற பட்சத்தில் ஆளுநரும் வேடிக்கை பார்க்கின்றாரா என எண்ண தோன்றுகிறது. எனவே ஆளுநர் நீங்கள் பிறப்பித்த உத்தரவை நீர்த்துப் போகாமல் பாதுகாத்து, நீதியை நிலைநாட்ட வேண்டியது உங்களது கடமை. அதனை நீங்கள் செய்ய தவறும் பட்சத்தில் நீங்களும் ஊழலுக்கு துணைபோகும் ஒருவர் என்றே நாங்கள் கருத வேண்டி ஏற்படும் என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிவதற்கு வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் சுபாகரை தொடர்பு கொண்டவேளை அது பலனளிக்கவில்லை. மேலும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரபாகரமூர்த்தி, குறித்த மரங்களை வெட்டுமாறு ஜே/139 கிராம சேவகர் ரஜிதாவுக்கு உத்தரவிட்டாரா என்பதை அறிவதற்காக அவருக்கு அழைப்பு மேற்கொண்டவேளை அவரது அலைபேசி உறக்க நிலையில் காணப்பட்டது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now