New Updates! Fresh news just arrived.

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு: ஈடுபட்ட 8 பேர் கைது! - Gu...

News

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு: ஈடுபட்ட 8 பேர் கைது!

October 8, 2026 5:54 pm
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு: ஈடுபட்ட  8 பேர் கைது!
கெசல்கமுவ ஓயாவில், ஆற்றுப் படுக்கையிலிருந்த மாணிக்கக்கல் அடங்கிய மண் படிமங்களினை சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்த எட்டுப் பேர் கொண்ட நபர்களை நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் அலுவலகத்தினுடைய விசேட பொலிஸ் குழுவினர் இன்று (08) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டின்சின் பகுதியிலுள்ள கெசல்கமுவ ஓயா சுற்றுசூழலை அழித்து, அக்காப்பிற்கு அருகில் செல்லும் உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பியில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரத்தினை பெற்று வளி அமுக்கக் கருவி மூலம் காற்றினை உட்செலுத்தி, ஆற்றுப் படுக்கையிலும் கரையோரப் பகுதிகளிலும் இவர்கள் குறித்த மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் நுவரெலியா பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரான ஜகத் சந்திரகுமாரவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நுவரெலியா பொலிஸின் விசேட பொலிஸ் குழுவொன்று பொகவந்தலாவை பகுதிக்கு அனுப்பப்பட்டு குறித்த சோதனை நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டது.

இச்சோதனை நடவடிக்கைக்காக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தினை சேர்ந்த இரு அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் மாணிக்கக்கல் அகழ்விற்கும், உளவு பார்ப்பதற்கும் பயன்படுத்திய இரண்டு முச்சக்கர வண்டிகளும், அகழ்விற்குப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் இரத்தினபுரி, பொகவந்தலாவை மற்றும் ஹட்டன் ஆகிய பகுதிகளினை சேர்ந்த 40 தொடக்கம் 50 வயதிற்குட்பட்டவர்கள் எனச் சோதனையை நடத்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (08) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

வி.தீபன்ராஜ்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now