New Updates! Fresh news just arrived.

சட்டவிதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக...

News

சட்டவிதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

March 28, 2026 10:27 am
சட்டவிதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!
வாகனங்களைச் செலுத்தும் போது சில சாரதிகளினால் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் வாகனங்களைச் செலுத்துதல், பிரதான வீதிகளில் போட்டிப் பந்தயங்களில் ஈடுபடுதல் மற்றும் பொழுதுபோக்கிற்காக வீதி விதிகளை மீறும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் தற்போது பொலிஸாருக்குத் தகவல்களை வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், இந்த தகவல்களின் அடிப்படையிலும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

எனவே, வீதியில் வாகனங்களைச் செலுத்தும் போது எப்போதும் சட்டத்திற்கு மதிப்பளித்து செயற்படுமாறு அவர் அனைத்து சாரதிகளையும் கேட்டுக்கொண்டார்.

சம்பவம் நடந்து முடிந்த பின்னர் தகவல்கள் கிடைத்தாலும், அதற்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

"விசேடமாக கூற வேண்டிய செய்தி என்னவென்றால், பொதுமக்கள் வழங்கும் உண்மைத் தகவல்கள் தொடர்பில் இலங்கை பொலிஸார் என்ற ரீதியில் நாம் உடனடி நடவடிக்கை எடுப்போம்.

அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல், ஒழுக்கமற்ற சாரதிகள் குறித்து எந்த நேரத்திலும் எமக்குத் தெரியப்படுத்துங்கள்.

எங்களிடம் உள்ள தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி நாம் நடவடிக்கை எடுப்போம். தற்போது எமக்குக் கிடைத்துள்ள அனைத்துத் தகவல்கள் தொடர்பிலும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எனவே, பஸ் சாரதிகள், இளைஞர்கள் மற்றும் அனைத்துச் சாரதிகளையும் சட்டத்தை மதித்து வாகனங்களைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எவ்வாறாயினும், அதிக வேகத்தில் சென்று, போட்டிப் போட்டுக்கொண்டு வீதிகளில் விளையாடினால், இரண்டு சக்கரங்களில் செல்ல வேண்டிய வாகனங்களை ஒரு சக்கரத்தில் (Wheelie) செலுத்திச் சென்றால், அவற்றுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கப்படாது.

பின்னர் ஒரு காலத்தில் தகவல் கிடைத்தாலும் நாம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். எமக்குத் தேவைப்படுவது தகவல் மட்டுமே.

சம்பவம் நடந்த அன்றே தகவல் கிடைக்க வேண்டும் என்பதில்லை, பின்னொரு நாளில் தகவல் கிடைத்தாலும் விசாரணைகளை ஆரம்பித்து நடவடிக்கை எடுப்போம்" எனத் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now