New Updates! Fresh news just arrived.

வருட இறுதிக்குள் மலையக வீடுகளை பூர்த்தி செய்யுமாறு அதிகார...

News

வருட இறுதிக்குள் மலையக வீடுகளை பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை!

June 24, 2026 10:37 pm
வருட இறுதிக்குள் மலையக வீடுகளை பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை!
இந்திய உதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் 4,700 வீடுகளை உள்ளடக்கிய வீடமைப்பு திட்டத்தை, இந்த ஆண்டின் இறுதிக்குள் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய உதவியோடு மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு கலந்துரையாடலானது ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி தலைமையில் இன்று (24) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த வீட்டுத் திட்டத்தின் கீழ், அனர்த்த அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு 2,026 வீடுகளானது வழங்கப்படவுள்ளன.

எஞ்சிய வீடுகள் பெருந்தோட்டத் துறையில் வசிக்கும் தகுதியுள்ள தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 22 பிராந்திய பெருந்தோட்டக் நிறுவனங்களுக்கு சொந்தமான தோட்டங்களில் வசிக்கும் மலையகக் குடும்பங்களுக்கும், அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், ஜனவசம மற்றும் எல்கடுவ பெருந்தோட்டங்களின் கீழ் உள்ள தோட்டங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன.

ஒவ்வொரு வீட்டின் நிர்மாணப் பணிக்காகவும் இந்திய அரசாங்கம் 2.8 மில்லியன் ரூபாவையும், இலங்கை அரசாங்கம் 400,000 ரூபாவையும் பங்களிப்பாக வழங்கியுள்ளன.

இந்தக் கலந்துரையாடலின் போது, வீடுகளை நிர்மாணிப்பதற்காக அடையாளம் காணப்பட்ட காணிகளை எவ்வித தாமதமுமின்றி விடுவிக்குமாறும், திட்டத்திற்கு பொருத்தமான காணிகளை அடையாளம் காணத் தேவையான அறிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வழங்குமாறும் பிரபாத் சந்திரகீர்த்தி பணிப்புரை விடுத்தார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன் இந்த வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now