New Updates! Fresh news just arrived.

வடமராட்சி கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்: கடற...

News

வடமராட்சி கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்: கடற்படையினர் பாராமுகமாக இருப்பதாக உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டு!

April 12, 2026 3:23 pm
வடமராட்சி கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்: கடற்படையினர் பாராமுகமாக இருப்பதாக உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டு!
[நாகர்கோவில், யாழ்ப்பாணம்] – வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில், எல்லை தாண்டி வந்த இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளில் ஈடுபடுவதாகவும், இதனைத் தடுப்பதில் கடற்படையினர் மெத்தனப் போக்குடன் செயற்படுவதாகவும் தெரிவித்து உள்ளூர் மீனவர்கள் கடும் கவலையும் ஆத்திரமும் வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி
நேற்று முன்தினம் நாகர்கோவில் கிழக்கு திசையில், கரையில்லிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்திருக்கின்றனர். இவர்கள் இந்தியப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் 'குல்லா' எனப்படுகின்ற படகுகளில் வந்து, இலங்கைக் கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட 'லாம்பு' (Light Course) மீன்பிடி தொழிலில் ஈடுபட்டதை எமது பகுதி மீனவர்கள் நேரில் கண்டுள்ளனர்.


இதனை உறுதிப்படுத்தும் வகையில், அப்பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த உள்ளூர் மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தமது கையடக்கத் தொலைபேசிகள் மூலம் காணொளிப் பதிவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

உள்ளூர் மீனவர்களின் குற்றச்சாட்டுகள்
இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள வடமராட்சி மீனவர்கள் பின்வரும் முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்:

பாரபட்சமான நடவடிக்கை: "நாங்கள் எமது கடற்பரப்பில் வாழ்வாதாரத்திற்காகத் தொழில் செய்யும்போது, சிறிய விதிமீறல்களைக் காரணம் காட்டி கடற்படையினர் எங்களைக் கைது செய்கிறார்கள். ஆனால், எல்லை தாண்டி வந்து எமது வளங்களினை சூறையாடும் குறித்த இந்திய மீனவர்களைக் கடற்படையினர் வேடிக்கை பார்க்கி ன்றார்கள்," எனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தடைசெய்யப்பட்ட முறைகள்: சூழலியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் 'லாம்பு' மீன்பிடி முறை இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான முறைகளினால் எமது கடல் வளங்களானது முற்றாக அழிந்து போகும் அபாயமுள்ளதாக மீனவர்கள் எச்சரிக்கின்றனர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்: இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான வருகையினால் உள்ளூர் மீனவர்களின் வலைகள் சேதமாக்கப்படுவதோடு, அவர்களது வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

கோரிக்கை
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்களினை கட்டுப்படுத்தவும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளினை தடுத்து நிறுத்தவும் உரிய தரப்பினர் உடனடியாக நடவடிக்கைகளினை எடுக்க வேண்டும் என்று வடமராட்சி கிழக்கு மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கடற்படையினர் எமது நாட்டு மீனவர்கள் மீது காட்டும் சட்டக் கெடுபிடிகளை, எல்லை தாண்டி வரும் அந்நிய மீனவர்கள் மீதும் பிரயோகித்து எமது கடல் எல்லையையும் வளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now