New Updates! Fresh news just arrived.

வடக்கில் முதலிட முதலீட்டாளர்கள் ஆர்வம்: ஆளுநர் தெரிவிப்பு...

News

வடக்கில் முதலிட முதலீட்டாளர்கள் ஆர்வம்: ஆளுநர் தெரிவிப்பு!

January 19, 2026 6:41 pm
வடக்கில் முதலிட முதலீட்டாளர்கள் ஆர்வம்: ஆளுநர் தெரிவிப்பு!
முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாகவுள்ள நிலையில், அதற்கான அடிப்படை உட்கட்டுமானங்களினை மேம்படுத்தி, முதலீட்டுக்கு ஏற்ற சூழலினை உருவாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் கீழான தேசிய திட்டமிடல் திணைக்களம், தேசிய வரவு – செலவுத் திட்டத் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் ஆகியவற்றினுடைய பணிப்பாளர் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழான உலக வங்கியினுடைய திட்டங்களுக்கான பணிப்பாளர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலானது ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (19) மாலை நடைபெற்றது.

நிதி அமைச்சினுடைய உயர் அதிகாரிகள் குழுவினர் வடக்கு மாகாணத்திற்கு உத்தியோகபூர்வமாக மேற்கொண்ட முதலாவது விஜயம் இதுவாகும்.

குறித்த கலந்துரையாடலில் உரையாற்றிய ஆளுநர்,

போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்திருக்கும் போதிலும், வடக்கு மாகாணம் மீளக்கட்டியெழுப்பப்படுவதில் பல சவால்களினை எதிர்கொண்டுள்ளது. பிரதான வீதிகள் புனரமைக்கப்பட்டிருந்தாலும், கிராமப்புற வீதிகள் மற்றும் தீவகப் பிரதேசங்களுக்கான போக்குவரத்து வசதிகளானது மிகவும் பின்தங்கியுள்ளன. கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான நீண்ட பயண நேரம் சுற்றுலா பயணிகளுக்குச் சவாலாக உள்ளது.

எனினும், இந்தியாவுடனான நேரடி வான் மற்றும் கடல்வழித் தொடர்புகள் சுற்றுலா பயணிகளின் வருகையினை அதிகரிக்கச் செய்துள்ளது. ஆகவே, எதிர்காலத்தில் அதிகரிக்க உள்ள சுற்றுலா பயணிகளைக் கருத்தில் கொண்டும், எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டினைக் கருத்தில் கொண்டும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

எமது மாகாணத்தினுடைய மூலப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் முடிவுப் பொருட்களாக இங்கேயே விற்பனைக்கு வரும் நிலை மாற்றப்பட வேண்டும். இங்கேயே அவற்றினை பெறுமதிசேர் பொருட்களாக மாற்றுவதற்குரிய பொறிமுறைகள் அவசியம்.

உலக வங்கியினுடைய 'புத்துயிர்' (REVIVE) திட்டத்தின் முதல் கட்டத்தில் யாழ். மாவட்டம் மட்டுமே உள்வாங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், வடக்கினுடைய ஏனைய நான்கு மாவட்டங்களுக்கான அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளன. எனவே, ஐந்து மாவட்டங்களினையும் உள்ளடக்கி எமது பொருளாதார மேம்பாட்டை உறுதிப்படுத்த நாம் விரும்புகின்றோம், எனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.

இதன்போது மாவட்டச் செயலாளர்களால் பின்வரும் முக்கிய கோரிக்கைகளானது முன்வைக்கப்பட்டன:

முல்லைத்தீவு: கொக்கிளாய் பாலத்தினை அமைத்தல்.

கிளிநொச்சி: நீர் விநியோகத் திட்டத்தினையும், பூநகரி கௌதாரிமுனைச் சுற்றுலா வீதிப் புனரமைப்பும்.

மன்னார்: வீதிப் புனரமைப்பும், மன்னார் தீவினுடைய வடிகாலமைப்பு மேம்பாடும்.

வவுனியா: வடக்கின் நுழைவாயிலான வவுனியாவின் வன்னேரிக்குளம் சுற்றுலாத் திட்டத்தினை உள்வாங்குதல்.

யாழ்ப்பாணம்: தெரிவு செய்யப்பட்டுள்ள திட்டங்களினை விரைவுபடுத்தல்.

இதற்குப் பதிலளித்த நிதி அமைச்சினுடைய உயர் அதிகாரிகள், 'வடக்கு மாகாணத்தில் இருந்து நியாயப்பாடுகளுடன் கூடிய சிறந்த திட்டங்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில், முன்னுரிமை அடிப்படையில் உலக வங்கித் திட்டங்களினை மாற்றியமைக்க முடியும். எனினும், இவை கடன் நிதிகள் என்பதினால், முதலீட்டுக்குரிய நற்பேறுகள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். தேவைப்பாடுகளினை சரியாக அடையாளம் கண்டு மிகச் சிறந்த திட்டங்களினை முன்வைக்கும்போது அரசாங்கத்தினால் கூட நிதி வழங்க முடியும், எனவும் குறிப்பிட்டனர்.

மேலும், கிராமிய மற்றும் நகர்ப்புறங்களினை இணைக்கும் 'ரூபன்' (RURBAN) திட்டம் மற்றும் விவசாயத் துறைசார் திட்டமிடல்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கடந்த கால வெளிநாட்டு நிதித் திட்டங்களின் அனுபவங்களினைக் கொண்டு, இனிவரும் திட்டங்கள் மாகாணத் தேவைகளினைச் சரியாக அடையாளப்படுத்தி முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் நிதி அமைச்சினுடைய பணிப்பாளர் நாயகங்களான இந்திக பிரேமரத்ன (தேசிய திட்டமிடல்), ஜூட் நிலுக்ஷ (தேசிய வரவு-செலவு) மற்றும் சமந்த பண்டார (வெளிநாட்டு வளங்கள்) மற்றும் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர் மற்றும் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் ஆளுநரின் ஆலோசனைக் குழுவின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now