New Updates! Fresh news just arrived.

ஈரான் மோதல் தீவிரம் – கப்பல் மீது மீண்டும் தாக்குதல் - Gu...

News

ஈரான் மோதல் தீவிரம் – கப்பல் மீது மீண்டும் தாக்குதல்

August 12, 2026 7:39 am
ஈரான் மோதல் தீவிரம் – கப்பல் மீது மீண்டும் தாக்குதல்
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், கடல் வழிப் போக்குவரத்திலும் புதிய தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. அமெரிக்காவும், ஈரான் ஆதரவு பெற்ற யேமன் ஹூதி அமைப்பினரும் தனித்தனியாக கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்கா முன்வைக்கும் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரை ஹோர்முஸ் நீரிணையை திறக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. இதனால் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உடன்பாடு எட்டப்படுவதற்கான சாத்தியம் குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உலகின் முக்கிய எண்ணெய் விநியோகப் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஓமான் வளைகுடா மற்றும் செங்கடலுக்கான நுழைவுப் பகுதிகளைச் சுற்றியே சமீபத்திய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும், ஒப்பந்தம் ஒன்று எட்டப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தாலும், தற்போதைய நிலவரத்தில் மோதல் முடிவடைவதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படவில்லை.

மோதல் நீடிக்கும் என்ற அச்சம் அதிகரித்துள்ளதால் சர்வதேச சந்தைகளிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக எண்ணெய் விலை அதிகரித்துள்ளதுடன், உலகளாவிய பங்குச் சந்தைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தற்போதைய சந்தை நிலவரப்படி, பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 1.4 சதவீதம் அதிகரித்து ஒரு பீப்பாய் 89.34 டொலராகவும், WTI கச்சா எண்ணெயின் விலை 1.3 சதவீதம் உயர்ந்து 83.63 டொலராகவும் காணப்படுகிறது.

இதேவேளை, செங்கடலின் தெற்கு நுழைவாயிலான பாப் எல்-மண்டேப் நீரிணைக்கு அருகில் நேற்று சிறிய சரக்குக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் நான்கு கப்பல் பணியாளர்கள் உயிரிழந்ததாக யேமன் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், ஹூதிகளுக்கு எதிராக செயற்படும் யேமன் இராணுவக் குழுவைச் சேர்ந்த இரு மீட்புப் பணியாளர்களும் சம்பவத்தில் உயிரிழந்ததாக அந்நாட்டு கடலோரக் காவல்படை குறிப்பிட்டுள்ளது.

எகிப்துக்குச் சொந்தமான ‘திஹாமா’ (Tihamah) என்ற கப்பல் மீதான இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள், ஈரான் மோதல் ஆரம்பித்த பின்னர் ஹூதி அமைப்பினரால் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பதிவான முதல் உயிரிழப்புகளாக கருதப்படுகின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now