New Updates! Fresh news just arrived.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து கடமையேற...

News

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து கடமையேற்கத் தடையா? : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என வைத்தியசாலை அத்தியட்சகர் உறுதி!

August 10, 2026 10:33 am
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து கடமையேற்கத் தடையா? : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என வைத்தியசாலை அத்தியட்சகர் உறுதி!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து கடமையேற்கச் சென்ற புதிய நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்ககளை கடமைக்கு அறிக்கை செய்ய விடாது தடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய நியமனம் பெற்ற குறித்த பெண் உத்தியோகத்தர்களும் தங்களது கலாசார மற்றும் மத நடைமுறைக்கு அமைவாக பர்தா அணிந்த நிலையில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கடமையேற்கச் சென்றுள்ளனர். எனினும், அவர்கள் கடமைக்கு அறிக்கை செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள் தங்களது கலாசார முறைக்கேற்ப உடை அணிந்து கடமையாற்றுவதற்கு சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறிருக்கையில் தங்களை கடமையேற்க விடாது தடுத்தமை தொடர்பில் உரிய விளக்கம் வழங்கப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக எமது ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணனை தொடர்புகொண்டு வினவியபோது, “இனவாதமாகவோ, பிரதேசவாதமாகவோ, தான் விரும்பியவாறோ யாரும் செயற்பட முடியாது. இது அரச ஸ்தாபனம். இந்த இடத்தில் யாருடைய விருப்பத்தின் படியும் யாரும் நடக்க முடியாது. அரசியலமைப்பு, தாபன விதிக்கோவை மற்றும் உரிய சுற்றுநிருபங்கள் என்ன கூறுகின்றனவோ அதற்கமையவே செயற்பட முடியும்” எனத் தெரிவித்தார்.

மேலும், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையை சுமூகமான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வைத்தியசாலை அத்தியட்சகர் உறுதியளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், சம்பவத்தின் உண்மை நிலை, நடைமுறையில் உள்ள சுகாதார அமைச்சின் சுற்றுநிருபங்கள் மற்றும் அரச சேவை விதிமுறைகளுக்கு அமைவாக உரிய முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

பர்தா அணிந்து கடமையாற்றுவதற்கான அனுமதி தொடர்பான சுகாதார அமைச்சின் நடைமுறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட சுற்றுநிருபங்கள் தெளிவுபடுத்தப்படுவது, எதிர்காலத்தில் இவ்வாறான சர்ச்சைகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now