New Updates! Fresh news just arrived.

இஸ்லாமாபாத்தின் கழிவுநீர் பிரச்சினை: கல்முனை மாநகர சபை அவ...

News

இஸ்லாமாபாத்தின் கழிவுநீர் பிரச்சினை: கல்முனை மாநகர சபை அவசர நடவடிக்கை!

February 13, 2026 5:29 pm
இஸ்லாமாபாத்தின் கழிவுநீர் பிரச்சினை: கல்முனை மாநகர சபை அவசர நடவடிக்கை!
கல்முனை, இஸ்லாமாபாத் தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற கழிவுநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக கல்முனை மாநகர சபை விஷேட வேலைத் திட்டம் ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை (13) முன்னெடுத்துள்ளது.

கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக இதற்கான அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுனாமி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்காக அமைக்கப்பட்ட இஸ்லாமாபாத் வீட்டுத் தொகுதிக்கான கழிவுநீரகற்றல் முறைமையில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக அங்குள்ள வீடுகளில் இருந்து கழிவு நீர் சேகரிப்புத் தாங்கிக்கு வருகின்ற கழிவு நீர் சீராக அகற்றப்படாமல் அப்பகுதி முழுவதும் பரவுவதால் பாரிய துர்நாற்றமும் சுற்றுச்சூழல் பாதிப்பும் சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகின்றன.

இதனால் குறித்த வீட்டுத் தொகுதியில் வாழும் மக்கள் மாத்திரமல்லாமல் சுற்றிவரவுள்ள அனைத்து மக்களும் பெரும் அசெளகரியங்களினையும் டெங்கு உள்ளிட்ட நோய் அபாயங்களினையும் எதிர்நோக்கி வருகின்றனர். இஸ்லாமாபாத் எனும் பாரம்பரிய ஊர் ஒன்றினுடைய பாரிய துயரமாக இப்பிரச்சினை கருதப்படுகின்றது.

இதனைக் கருத்தில் கொண்டே தமது பொறுப்புக் கூறலுக்கு அப்பாற்பட்ட இப்பாரிய பிரச்சினைக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு வழங்குவதற்கு கல்முனை மாநகர சபை குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்போது பிரதான தாங்கியிலிருந்து சுத்திகரிப்புக்காக செல்கின்ற கழிவு நீர்க் குழாய் பாதையில் அமைந்துள்ள பல துணைத் தாங்கிகள் திறக்கப்பட்டு, அவற்றில் நிரம்பியிருந்த பிளாஸ்டிக் போத்தல்கள், பெம்பஸ்கள் மற்றும் திண்மக்கழிவுகள் அகற்றப்பட்டும் திரவங்கள் வெளியேற்றப்பட்டும் சீர் செய்யப்பட்டது.

அடிக்கடி இப்பிரச்சினை தலைதூக்குகின்ற சந்தர்ப்பங்களில்
இதற்கு முன்னரும் பல தடவைகள் கல்முனை மாநகர சபை இவ்விடயத்திற்கு உதவி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக முறையான திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும். இது தொடர்மாடி வீட்டுத் தொகுதி என்பதால் அதன் பராமரிப்புக்கென ஆதன முதலீட்டுக்குழு (Condominium Committee) ஒன்று அமைக்கப்பட்டு, அதன் மூலமே அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

கல்முனை, இஸ்லாமாபாத் தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் கடந்த பல வருடங்களாக இக்குழு செயற்பாட்டில் இல்லை எனத் தெரிய வருகிறது. இது விடயத்தில் சம்மந்தப்பட்ட தரப்பினர் கூடிய கவனம் செலுத்தி, கொண்டோமினியம் குழுவை செயற்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

(அஸ்லம் எஸ்.மெளலானா)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now