New Updates! Fresh news just arrived.

"ஊடகங்களை அடக்குகிறோம் என்பது அப்பட்டமான பொய்" ...

News

"ஊடகங்களை அடக்குகிறோம் என்பது அப்பட்டமான பொய்" : வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உப தவிசாளர் தயாபரன்!

July 1, 2026 12:59 pm
"ஊடகங்களை அடக்குகிறோம் என்பது அப்பட்டமான பொய்" : வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உப தவிசாளர் தயாபரன்!
"நாம் ஊடகங்களை அடக்குவதாக தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் திட்டமிட்டு போலியான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்" என வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் தயாபரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் உப தவிசாளர் தயாபரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது, சபை அமர்வுகளில் ஊடகவியலாளர்களை அனுமதிப்பது தொடர்பாகப் பல காரசாரமான விவாதங்களும், வாதப் பிரதிவாதங்களும் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் (NPP) உறுப்பினர்கள் தவிசாளர் மற்றும் செயலாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர்.

குறித்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த உப தவிசாளர் தயாபரன் குறிப்பிட்டதாவது:

"ஊடகவியலாளர்கள் தங்களை உறுதிப்படுத்தக்கூடிய முறையான ஆவணங்களைச் சபையில் சமர்ப்பித்து, சபை அமர்வுகளில் தாராளமாகக் கலந்துகொள்ள முடியும். அதற்கு எந்தத் தடையும் இல்லை.

அந்த வகையில், ஊடகவியலாளர் லின்ரன் அவர்களும் தனது ஊடக அடையாள அட்டையை முறையாகச் சமர்ப்பித்தே இன்றைய சபை அமர்வில் கலந்துகொண்டிருந்தார்.

சபை மரியாதையையும் அதன் தனித்துவத்தையும் பேணும் பொருட்டே ஊடகவியலாளர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒருவேளை, அந்த நிபந்தனைகளில் ஊடக அடக்குமுறை சார்ந்த விடயங்கள் ஏதேனும் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டால், அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய நாம் தயாராகவே உள்ளோம்."

மேலும், "தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் இதனைத் தங்களது சுய அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள். 'ஊடக அடக்குமுறை' என்ற போலியான பிம்பத்தை உருவாக்கி, மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்" என்றும் உப தவிசாளர் தயாபரன் இதன்போது சாடினார்.

பூ.லின்ரன்
(வடமராட்சி பச்சிளைப்பள்ளி நிருபர்)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now