New Updates! Fresh news just arrived.

13 ஆம் திருத்தத்தை அரசியலமைப்பில் கொண்டு வருவதற்கு விடாத ...

News

13 ஆம் திருத்தத்தை அரசியலமைப்பில் கொண்டு வருவதற்கு விடாத ஜேவிபியை தமிழ் மக்கள் வடக்கில் ஆதரித்தது கவலையான விடயம்!

March 14, 2026 7:59 pm
13 ஆம் திருத்தத்தை அரசியலமைப்பில் கொண்டு வருவதற்கு விடாத ஜேவிபியை தமிழ் மக்கள் வடக்கில் ஆதரித்தது கவலையான விடயம்!
13 ஆம் திருத்தத்தை அரசியலமைப்பில் கொண்டு வருவதற்கு பாடுபட்டவர்கள் எமது அணியைச் சார்ந்தவர்கள் அதனை வழங்க விடாது எதிர்த்து கூச்சலிட்ட தரப்பான ஜேவிபியை தமிழ் மக்கள் வடக்கில் ஆதரித்தது கவலையான விடயம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்ம பண்டாரா யாழில் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் சஜித் பிரேமதாஸவின் கொள்கை எப்போதும் தேசிய ஒற்றுமையை பற்றியது அவர் வடக்கிற்கும் தெற்கிற்கும் காத்திரமான பங்களிப்புகளை வழங்கினார்.

வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் வடக்கில் பல வீடுகளை கட்டியதை நான் நினைவு கூற விரும்புவதோடு அவரது தந்தையும் வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது வடக்கு கிழக்கில் பல வீட்டு திட்டங்களை அமைப்பதற்கு காரணமாக இருந்தார்.

தற்போது ஆட்சியில் உள்ள ஜேவிபி என்கின்ற தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களிடம் பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நிறைவேற்ற முடியாமல் திண்டாடி வருகிறது.

வடக்கில் பல வாக்குறுதிகளை வழங்கினார்கள் நிலங்களை விடுவிப்போம் அரசியல் கைதிகளை விடுவிப்போம் அதேபோல் தெற்கு மக்களுக்கும் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார்கள் ஆனால் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.

பிணை முறி மோசடியாளர்களை கைது செய்வோம் என்றார்கள் அவர்களால் சொன்னதை செய்ய முடியவில்லை ஆனால் அதைவிட பாரிய மோசடியாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நிலக்கரி மோசடி இடம் பெற்றுள்ளது.

மேலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் சுமார் 320 கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து விரைவாக விடுவிக்கப்பட்டமை அதில் என்ன பொருட்கள் இருந்தது என்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகிறது.

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு தொடர்ச்சியாக தமது ஆதரவை வழங்கிவந்தவர்கள் அதை நாம் மறக்க மாட்டோம்.

ஆகவே வடக்கு கிழக்கு மாகாணங்களின் பிளவுக்கு காரணமான ஜேவிபி என்கின்ற தற்போது தேசிய மக்கள் சக்தியாக ஆட்சி பீடத்தில் அமர்ந்திப்பவர்களை தமிழ் மக்கள் இனியும் நம்பி ஏமாற வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்

குறித்த ஊடக சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண,யாழ் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் அனோஜன் மற்றும் தொகுதி அமைப்பாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now