New Updates! Fresh news just arrived.

யாழ். மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம்!

News

யாழ். மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம்!

July 15, 2026 1:17 pm
யாழ். மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம்!
யாழ்ப்பாண மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம் உபகுழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் பங்குபற்றுதலுடன், நேற்றைய தினம்(14) யாழ்ப்பாண மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று சுற்றுநிருபத்திற்கு அமைவாக திட்டமிடல், சுற்றுலா, உணவு பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் கல்வி ஆகிய உப குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அமைவாக கல்வி உபகுழுவின் தலைவராக ஜெயசந்திரமூர்த்தி றஜீவன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி உபகுழுவின் முதலாவது கூட்டம் இது எனவும் தெரிவித்தார்.

மேலும், அண்மையில் வெளியாகிய க.பொ. த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி யாழ்ப்பாண மாவட்டம் முதன்மை பெற்றிருப்பதாகவும், அதற்காக உழைத்த அனைவருக்கும் அரசாங்க அதிபர் என்ற ரீதியில் நன்றிகளையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டார். இக் கூட்டத்தில் மத்திய மாகாண ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமான தீர்மானங்களை எடுப்பதற்கு பங்களிப்பினை நல்குமாறு கேட்டுக்கொண்டார்.

இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வழி நடத்தலின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர் நியமிக்கப்பட்டு கல்வி உபகுழுக் கூட்டங்களை நடாத்தி மாவட்டத்தில் கல்வி தொடர்பாக எதிர்நோக்கும் சவால்களை ஆராய்ந்து முன்னிலைப்படுத்துவதற்காக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 பிரதேச செயலகங்களிலும் 05 கல்வி வலயங்களிலும் கல்வி தொடர்பான பிரச்சினைகளினை ஆராய்வதோடு, தீர்க்கக்கூடிய பிரச்சனைகளினை தீர்ப்பதுடன் ஏனைய பிரச்சினைகளினை மத்திய அமைச்சின் மட்டத்திற்கு கொண்டு செல்வதும் இதன் நோக்காகும் எனவும், மேலும் வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தி இல்லாமல் காணப்படும் பாடசாலைகளை அபிவிருத்தி செய்தல், ஆளணி பற்றாக்குறை போன்றன காணப்படுவதாகவும் அதனை தீர்ப்பது தொடர்பாகவும், கல்விப் பெறுபேறுகளில் கடந்தகால யுத்த அசாதாரண நிலைமைகள் தாக்கம் செலுத்துவதாகவும் தாயை இழந்த, தந்தையை இழந்த, பெற்றோரை இழந்து அநாதை இல்லங்களில் பிள்ளைகள் இருப்பதாகவும், கல்வியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்து முன்னிலைக்கு கொண்டு வர வேண்டும் எனவும், கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்குமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை ஒன்றிணைத்தல், கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பான பொறிமுறையை வகுத்தல், வட மாகாண ஆசிரியர்களுக்கான இடமாற்றம், கஸ்ட அதிகஸ்ட பிரதேசங்கள், உள்ளிட்ட விடயங்களை இக் கூட்டத்தில் ஆராயப்பட உள்ளதாகவும் இவை தொடர்பில் ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்

இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த,
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், மாவட்ட் ஒருங்கிணைப்புக் குழுவினுடைய தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், கல்வி சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளினை இக்கூட்டத்தில் முன்வைக்குமாறும், அரசாங்கமானது ஆசிரியர் வெற்றிடங்கள் மற்றும் ஏனைய ஆளனி வெற்றிடங்களினை படிப்படியாக நிவர்த்தி செய்யும் என்றும் தெரிவித்தார்.

மேலும் இலங்கை வறுமை ஒழிப்பில் முன்னிலை வகித்து வருவதாகவும், கல்வித் துறையில் தற்போது வறுமை மற்றும் போதைப் பொருள் பாவனை என்பனவும் தாக்கத்தை ஏற்படுத்தி பின்னிப்பிணைந்துள்ளதாகவும், வறுமை ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு போன்ற செயற்றிட்டத்தில் அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருவதாகவும், எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் கூடுதலான நிதி ஒதுக்கீடுகள் மாவட்ட ரீதியாகவும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மக்களுக்கு விமர்சிக்கும் உரிமை உண்டு எனவும், அவ்விமர்சனத்தை தவறாக சிலர் சித்தரிப்பதாகவும், எமது அரசாங்கத்திடம் இலஞ்சம், பொய் மோசடி இல்லாத அரசியல் கலாச்சாரம் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கல்வி மேம்பாட்டுக்கு தங்களுடைய ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைக்குமாறும் கௌரவ அமைச்சர் கேட்டுக் கொண்ட

இக் கலந்துரையாடலில் ஆசிரியர் பதவி வெற்றிடங்கள், நெடுந்தீவு ஆசிரியர்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்தல், குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை ஒன்றிணைக்கும் செயற்பாடு, பாடரீதியான ஆசிரியர்களின் தேவைப்பாடுகள், தொழில் கல்வி தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல், சமாந்திர வகுப்பு என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் மற்றும் இளைஞர்கள் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு க.சிவகரன், மாகாண கல்வி பணிப்பாளர் திரு. வை. ஜெயச்சந்திரன், ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு. எஸ். கபிலன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள், கல்வித்துறையோடு தொடர்புடைய உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now