New Updates! Fresh news just arrived.

கபில சந்திரசேனவின் மரண விசாரணை கொழும்பு குற்றத்தடுப்பு பி...

News

கபில சந்திரசேனவின் மரண விசாரணை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றம்!

May 9, 2026 4:56 pm
கபில சந்திரசேனவின் மரண விசாரணை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றம்!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அவரது உடல் மீதான பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்காக ஐந்து பேர் கொண்ட வைத்தியக் குழு நியமிக்கப்பட்டுள்ளதோடு, தற்போது பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கபில சந்திரசேனவின் சடலம் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று காலை கண்டெடுக்கப்பட்டது.

அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

இதற்கிடையில், அவரது மரணம் குறித்த பிரேத பரிசோதனையை நடத்துவதற்காக கொழும்பு பிரதான விசேட சட்ட வைத்திய அதிகாரி ஸ்ரீயந்த அமரரத்ன தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசேட சட்ட வைத்தியக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் பசன் அமரசேன நேற்று வழங்கிய உத்தரவிற்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று காலை கொழும்பு சட்ட வைத்திய மற்றும் நச்சுயியல் நிறுவனத்தில் பிரேத பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டன.

சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் கபில சந்திரசேனவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையிலேயே, அவர் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தார்.

2013ஆம் ஆண்டு இடம்பெற்ற எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் 54 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்திரசேன, கடந்த மே 5ஆம் திகதி 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் நெருங்கிய உறவினர்கள் மூவரின் தலா 100 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும், பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவர் தனது உறவினர்கள் எனக் கூறி இருவரைப் போலியாக முன்னிலைப்படுத்தியமை நீதிமன்றத்தில் தெரியவந்தது.

நீதிமன்றத்தின் நம்பிக்கையை மோசடி செய்தமைக்காக, வழக்கு விசாரணைகள் முடியும் வரை அவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான், சந்தேகநபருக்கு மீண்டும் பிடியாணை பிறப்பித்தார்.

குறித்த பிடியாணையின் பிரகாரம், கபில சந்திரசேன நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now