New Updates! Fresh news just arrived.

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: டிசம்பர் 14ஆம் திக...

News

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: டிசம்பர் 14ஆம் திகதி நீதிமன்ற கட்டளை!

November 16, 2026 3:59 pm
கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: டிசம்பர் 14ஆம் திகதி நீதிமன்ற கட்டளை!
கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்காக வைத்தியர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் ஆறு முக்கிய பிரமுகர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள வழக்கு, இன்று (16) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், வழக்கின் நீதிமன்ற கட்டளைக்காக எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி வழங்கப்படுவதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பதில் நீதவான் ஏ.எல்.முஹம்மட் முனாஸ் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இ. அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் தொழிலதிபர் எம்.எச்.எம். இப்ராஹிம் ஆகிய பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இவ்வழக்கில் நிகல்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்கை விசாரிப்பதற்கான நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் பிரதிவாதிகள் தரப்பில் ஏற்கனவே ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அத்துடன், சில பிரதிவாதிகள் சார்பில் எழுத்துமூல ஆட்சேபனைகளும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

வழக்காளியான வைத்தியர் டாக்டர் கு. சுகுணன் சார்பில் சட்டத்தரணி க. கிசோபனா ஆஜராகி வாதங்களை முன்வைத்திருந்தார். முதலாம் பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனும், இரண்டாம் பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி எம்.என். பாத்திமா நுஸ்ஹாவும், ஆறாம் பிரதிவாதி சார்பில் சட்டத்தரணிகளான எம். முஹம்மட் நப்ஸர், எம். முஹம்மட் முபின், உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

இந்நிலையில், வழக்கின் சட்ட ரீதியான ஆட்சேபனைகள் மற்றும் முன்வைக்கப்பட்ட வாதங்களைப் பரிசீலித்து நீதிமன்ற கட்டளையை வழங்குவதற்காக வழக்கு எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now