New Updates! Fresh news just arrived.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம் கவலையளிக்கிறது: ...

News

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம் கவலையளிக்கிறது: பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை!

August 15, 2026 1:35 pm
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம் கவலையளிக்கிறது: பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 9 முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் தங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அணிந்து வந்த ஹிஜாப் உடையை அனுமதிக்க முடியாது என கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை நிர்வாகம் தடை விதித்துள்ளது. இவ்விவகாரம் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் செயல்பாடுகளை முன்னெடுப்போர் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கல்முனை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் இவ்வாறு இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளின் பின்புலத்தை அறிந்து அடையாளம் கண்டு அரசாங்கமும் சுகாதார அமைச்சும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இச்செயற்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் நாம் எதிர்பார்க்கும் இன ஒற்றுமையை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு தடங்கல் ஏற்படக்கூடிய நிலைமை ஏற்படலாம். கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இன முரண்பாடான செயற்பாடுகளை முஸ்லிம் கட்சிகள்,முஸ்லிம் புத்திஜீவிகள்,முஸ்லிம் சட்டத்தரணிகள்,சமூக ஆர்வலர்கள் மாத்திரமன்றி தமிழ் சமூகத்தில் உள்ள இன நல்லுறவை ஏற்படுத்த முனையும் சமூகத் தலைமைகளும் கண்டித்திருப்பது நமது சமூகங்களை இனவாதத்தை பேசி பிரிக்கமுடியாது என்பதனை காட்டுகிறது.

இதேவேளை,ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்கள் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஹிஜாப் பிரச்சினையை சத்தம் இல்லாமல் தான் உரிய தரப்புடன் பேசி சுமூகமாக முடித்து விட்டதாகவும் இதனை சிலர் சமூகவலைதளங்களில் ஊடாக ஊதிப்பெருப்பித்து பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் சமூக ஆர்வலர்மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளரின் 2026.08.14 ஆம் திகதிய கடிததின் பிரகாரம் குறித்த சுகாதார முஸ்லிம் பெண் பணியாளர்கள் சுகாதார அமைச்சு மற்றும் பொதுநிருவாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சீருடை அணியாமல் வருவதாகவும் இதனை மீறும் பட்சத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தபடுவார்கள் என்பதையும் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஐந்து முஸ்லிம் பெண் ஆசிரியைகள் கடமையாற்றி வந்த நிலையில் குறித்த பாடசாலை நிருவாகம் ஹபாயா ஆடையை தவிர்க்குமாறு வலியுறுத்தியது. இந்த உரிமை மீறலுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழு மற்றும் நீதிமன்ற மேன்முறையீடு மூலம் வழக்கு தாக்கல் செய்ததன் விளைவாக குறித்த ஆசிரியைகள் தங்களது கலாசார ஆடையுடன் கடமைக்கு செல்வதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றது.

இந்த நாட்டில் இன ஐக்கியத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்தும் என்ற உயரிய நம்பிக்கையுடன் மக்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த அரசாங்கமும் சுகாதார அமைச்சும் உடனடியாக குறித்த வைத்தியசாலை முஸ்லிம் பெண் பணியாளர்கள் தங்கள் கலாசார ஆடையுடன் தொடர்ந்தும் பணிகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

கே எ ஹமிட்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now