New Updates! Fresh news just arrived.

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்: நிர்வாகத் தீர்மானங்கள்...

News

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்: நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கக் கூடாது: பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹீர்!

August 12, 2026 2:07 pm
கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்: நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கக் கூடாது: பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹீர்!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அண்மையில் உருவாகியுள்ள நிர்வாக மற்றும் பணியாளர் தொடர்பான சர்ச்சை கவலையளிப்பதாகவும், தேவையற்ற சமூக உணர்வுகளைத் தூண்டக்கூடியதாகவும் அமைந்துள்ளது. சுகாதார சேவை என்பது எந்தவொரு இன, மத அல்லது மொழி வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்ட மனிதநேயப் பணியாகும்.

ஆகவே, வைத்தியசாலை நிர்வாகத்தில் எடுக்கப்படும் எந்தவிதமான தீர்மானமும் சட்டம், அரச சுற்றறிக்கைகள், நிர்வாக நடைமுறைகள் மற்றும் அனைத்து சமூகங்களினதும் உரிமைகளினை மதிக்கும் வகையில் அமைய வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசினுடைய தேசிய அமைப்பாளரும், மாவட்ட செயற்குழு தலைவருமாகிய பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹீர் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும், குறிப்பாக அரச சேவையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் ஆடை, மத அடையாளம் அல்லது தனிப்பட்ட நம்பிக்கைகள் தொடர்பில் முடிவுகளை எடுக்கும் போது, நாட்டின் சட்டங்களையும் அரசாங்கத்தின் நடைமுறைகளையும் தெளிவாகப் பின்பற்ற வேண்டியது திணைக்களத் தலைவர்களின் பொறுப்பாகும். தனிப்பட்ட நிர்வாக விளக்கங்கள் அல்லது ஒருதலைப்பட்சமான உத்தரவுகள் மூலம் ஒரு சமூகத்தின் மத உணர்வுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகக் கூடாது.

குறித்த விவகாரத்தில் இன்னொரு முக்கியமான அம்சத்தினையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முஸ்லிம் அல்லது சிங்கள சமூகங்களினை சேர்ந்த திணைக்களத் தலைவர்கள் நிர்வாகப் பொறுப்புகளில் இருக்கும் பல இடங்களில் பெரும்பாலும் இவ்வாறான பிரச்சினைகளானது உருவாகாமல், பரஸ்பர புரிந்துணர்வுடன் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேபோன்று மனதில் கசப்புணர்வு கொண்ட சில தமிழ் அதிகாரிகள் தமது பல்வேறுபட்ட அஜந்தாக்களுக்காக இவ்வாறான வேலைகளினை செய்கின்றார்கள்.

பிரச்சினை ஏற்படும் இடங்களில் இனத்தினையும் மதத்தினையும் முன்னிலைப்படுத்துவதற்குப் பதிலாக, நிர்வாகப் பொறுப்பு, சட்டத்தின் ஆட்சி மற்றும் தொழில்முறை ஒழுக்கம், பரஸ்பர மரியாதை ஆகியவற்றினை முன்னிலைப்படுத்த வேண்டும்.

தமிழ் – முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த அரசியல், சமூக மற்றும் மதத் தலைவர்கள் அண்மைக்காலமாக பல்வேறு சமூகப் பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வின் மூலம் தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக நிலவி வந்த முரண்பாடுகளைத் தாண்டி, இரு சமூகங்களும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டிய ஒரு முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.

இத்தகைய சூழ்நிலையில் ஒரு வைத்தியசாலை நிர்வாகப் பிரச்சினை இன மற்றும் மத உணர்வுகளைத் தூண்டும் நிலைக்கு செல்வது மிகவும் அதிருப்தியளிக்கும் விடயமாகும். இது ஒரு தனிப்பட்ட நிர்வாகப் பிரச்சினையாகத் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அது சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையை பாதிக்கும் வகையில் கையாளப்பட்டால், அதன் தாக்கம் வைத்தியசாலைச் சுவர்களைத் தாண்டி முழு சமூகத்தையும் பாதிக்கக்கூடும்.

ஆகவே, கல்முனை ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினையும் நான் கேட்டுக்கொள்வது, எந்தவொரு தீர்மானத்தினையும் அவசரமாகவோ ஒருதலைப்பட்சமாகவோ மேற்கொள்ளாமல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரினையும் அழைத்து கலந்துரையாடி, சட்டபூர்வமானதும் நியாயமானதுமான தீர்வொன்றினை பெற்றுக்கொடுப்பதாகும்.

அதேவேளை, குறித்த விவகாரத்தினை அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது இனவாத மற்றும் மதவாத உணர்வுகளினை தூண்டும் வகையிலோ பயன்படுத்த வேண்டாம் என்று அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையில் ஏற்பட்டுவரும் புரிந்துணர்வை எந்தவிதமான தனிப்பட்ட நிர்வாகச் சம்பவமும் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.

ஒரு வைத்தியசாலையின் கதவுகள் நோயாளிகளுக்கு இன, மத, மொழி பேதமின்றி திறந்திருக்க வேண்டும். அதேபோன்று, அந்த வைத்தியசாலையில் பணியாற்றும் ஒவ்வொரு அரச உத்தியோகத்தருக்கும் சட்டத்தால் வழங்கப்பட்ட உரிமைகள் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும்.

கல்முனை என்பது பல இன, மத மக்கள் இணைந்து வாழுகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பிரதேசமாகும். இங்கு ஏற்படும் எந்தவொரு பிரச்சினையும் மிகவும் பொறுப்போடு, கையாளப்பட வேண்டும். பிரச்சினைகளினை பெரிதாக்குவது எளிது; ஆனால் நல்லிணக்கத்தினை பாதுகாத்து தீர்வை நோக்கி நகர்வதே தலைமைத்துவத்தினுடைய உண்மையான அளவுகோல்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்க வேண்டும். அதேவேளை, தமிழ் – முஸ்லிம் சமூகத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து, இவ்வாறான பிரச்சினைகள் எதிர்காலத்தில் சமூக முரண்பாடுகளாக மாறாமல் தடுக்கும் பொறுப்பான அணுகுமுறையை உருவாக்க வேண்டும்.

சமூக நல்லிணக்கம் என்பது ஒரு அரசியல் கோஷம் அல்ல; அது நமது அடுத்த தலைமுறைக்கு நாம் வழங்க வேண்டிய பொறுப்பு. அந்த நல்லிணக்கத்தை காக்கும் வகையிலேயே கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரத்திற்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now