New Updates! Fresh news just arrived.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளரா, பிரதேச செயலாளரா?: மேன்...

News

கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளரா, பிரதேச செயலாளரா?: மேன்முறையீட்டு நீதிமன்றில் அம்பலமான முக்கிய திருப்பம்!

September 8, 2026 11:00 am
கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளரா, பிரதேச செயலாளரா?: மேன்முறையீட்டு நீதிமன்றில் அம்பலமான முக்கிய திருப்பம்!
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் பதவி நிலை மற்றும் அதிகாரங்கள் தொடர்பான எழுத்தாணை மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அங்கு கடமையாற்றுபவர் ஒரு "உப பிரதேச செயலாளர்" மட்டுமே தவிர, அவர் "பிரதேச செயலாளர்" அல்ல என்ற முக்கிய திருப்பம் திறந்த நீதிமன்றத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

நீதியரசர்களான மாயாதுன்ன கோரேயா மற்றும் எம்.சி.எல்.பி. கோபல்லவா ஆகியோர் முன்னிலையில் நேற்று (07) இக்கூட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நீதிமன்றில் நடைபெற்ற வழக்கின் விவரங்கள்:

கல்முனையன்ஸ் போரம் அமைப்பின் சார்பில் முபாரிஸ் எம். ஹனீபாவினால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுவுடன் (WRT/645/23), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனின் மனு (WRT/67/23) மற்றும் ஏ.எம். நஸீரின் மனு ((WRT/300/18) ஆகிய மூன்றும் இணைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

கலையரசனின் மனுவில் இடையீட்டு மனுதாரர்களாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபையினுடைய முன்னாள் உறுப்பினரான எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.

மனுதாரர் முபாரிஸ் எம். ஹனீபா சார்பில் சட்டத்தரணி றுடானி ஸாஹிரின் வழிகாட்டலில் ஜனாதிபதி சட்டத்தரணி விரான் கோரியா ஆஜராகியிருந்த நிலையில், கலையரசனின் மனுவை ஆதரித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தனது சட்ட வாதங்களை முன்வைத்தார்.

மனுவின் முக்கிய கோரிக்கை:

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஐந்தாவது பிரதிவாதி "பிரதேச செயலாளர்" அல்ல; மாறாக அவர் ஒரு "உப பிரதேச செயலாளர்" (ADS) மட்டுமே. எனவே, பிரதேச செயலாளருக்குரிய முழுமையான அதிகாரங்களையோ அல்லது பதவிக் குறியீடுகளையோ அவர் பயன்படுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

நீதிமன்றில் எட்டப்பட்ட திருப்பம்:

விசாரணையின் போது, 5ஆவது பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணியிடம் நிலைப்பாட்டைக் கேட்டறிந்தபோது, அவர் ஒரு "உப பிரதேச செயலாளர்" மட்டுமே என்பதைத் திறந்த நீதிமன்றத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து குறுக்கிட்ட அரசுத் தரப்புச் சட்டத்தரணியும், இதுவே அரசின் நிலைப்பாடும் ஆகும் என உறுதிப்படுத்தினார்.

அரச அதிகாரியாக இருந்தபோதிலும், சட்டமா அதிபர் திணைக்களம் அவருக்காக ஆஜராகுவதிலிருந்து விலகியிருந்த நிலையில், அவர் தனக்காகத் தனிப்பட்ட (Private) சட்டத்தரணி ஒருவரையே நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கின் இறுதி விவாதங்களுக்காக எதிர்வரும் 07.10.2026 மற்றும் 02.11.2026 ஆகிய தினங்களை நீதிமன்றம் ஒதுக்கியுள்ளது.

முன்னாள் எம்பி ஹரீஸ் வேண்டுகோள்:
வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், “முஸ்லிம் சமூகத்தின் முகவெற்றிலையான கல்முனையின் எதிர்காலம் நீதிமன்றத்தின் கைகளில் தங்கியுள்ளமையினால், பொதுமக்கள் அனைவரும் இந்த விடயத்தில் தீவிர அக்கறை செலுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now