New Updates! Fresh news just arrived.

சிறைச்சாலை உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

News

சிறைச்சாலை உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!

January 15, 2026 6:05 pm
சிறைச்சாலை உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர், சிறைச்சாலையினால் மதிய உணவுக்காக வழங்கப்பட்ட உணவை (தானத்தை) நிராகரித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையொன்றினை ஸ்தாபிக்கும் போது ஏற்பட்ட அமைதியின்மை குறித்து , பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் ஏனைய 05 சந்தேக நபர்களினையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் நேற்று (14) உத்தரவிட்டதது.

திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் பூமியில் அறநெறிப் பாடசாலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டதன் பின்னர், விகாராதிபதி மற்றும் நிர்வாக சபையினர் இணைந்து கடந்த நவம்பர் 16 ஆம் திகதி அங்கு புத்தர் சிலையொன்றினை வைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இருந்தபோதிலும், குறித்த காணியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானம் அனுமதியற்றது என்று கரையோரப் பாதுகாப்புத் திணைக்களமானது பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் பிக்குகளுக்கு அறிவித்திருந்தனர்.

பின்னர் அன்று இரவே புத்தர் சிலையினை குறித்த இடத்திலிருந்து அகற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதன்போது அமைதியின்மை ஏற்பட்டதோடு, தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறி இரண்டு தேரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது எழுந்த எதிர்ப்பு காரணமாக மறுநாளே மீண்டும் குறித்த இடத்தில் புத்தர் சிலையினை வைக்க பொலிஸார் நடவடிக்கையினை எடுத்திருந்தனர்.

இந்த பின்னணியில், திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையினுடைய ஒரு பகுதியினை இடித்து அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களமானது விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான இடைக்காலத் தடையுத்தரவு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த நவம்பர் 19 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் தொடர்பான பிரச்சினையினை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றமானது சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்திருந்தது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் இவ்வழக்கின் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டிருந்த 11 பேரில் 09 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

இவர்களில் திருகோணமலை கோட்டை வீதி ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையினுடைய விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், பலங்கொட கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவங்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் ஆகியோர் இதில் அடங்குகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கையொன்றினை சமர்ப்பித்ததோடு, கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தினை மீறியமை மற்றும் அனுமதியற்ற கட்டுமானம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக சமர்ப்பணங்களினை முன்வைத்தனர்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைளினை ஆராய்ந்த திருகோணமலை நீதவான், திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் மற்றும் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களினையும், ஏனைய ஐந்து சந்தேக நபர்களினையும் ஜனவரி 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now