New Updates! Fresh news just arrived.

குருணாகல் பிரதி மேயர் கைது: கட்சி உறுப்புரிமை அதிரடியாக ந...

News

குருணாகல் பிரதி மேயர் கைது: கட்சி உறுப்புரிமை அதிரடியாக நீக்கம்!

May 9, 2026 2:51 pm
குருணாகல் பிரதி மேயர் கைது: கட்சி உறுப்புரிமை அதிரடியாக நீக்கம்!
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள குருணாகல் மாநகர சபையினுடைய பிரதி மேயர் அஷார்டீன் மொய்னுதீனின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸினை பிரதிநிதித்துவப்படுத்தி குருணாகல் மாநகர சபைக்குத் தெரிவாகிய அவர், மாநகர சபையில் ஆட்சியமைக்கும் போது தனது ஆதரவை தேசிய மக்கள் சக்திக்கு (NPP) வழங்கி இருந்தார். அதன் பின்னர் அவர் பிரதி மேயராகப் பதவியேற்றுள்ளார்.

குருணாகல் பேருந்து நிலையத்தினை சுத்தப்படுத்தும் மற்றும் பொது மலசலக்கூடத்தைச் சுத்தப்படுத்தும் ஒப்பந்தத்தினை குத்தகைக்கு வழங்குவதற்காகவே அவர் குறித்த இலஞ்சப் பணத்தினை கோரியதாகக் கூறப்படுகின்றது.

இதன்படி, 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப் பணத்தினை பெற்றுக்கொள்ள முயன்ற போது, பத்தரமுல்லை பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் நேற்று (08) பிரதி மேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருணாகல் மாநகர சபையின் ஒப்பந்த செயல்முறை தொடர்பான விவகாரங்களுடன் தொடர்புடைய செயல்முறையுடன் தொடர்புபட்டு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர் அஸாருடீன் மெய்னுடீனின் கட்சி உறுப்புரிமை உடனுக்குக்கு அமுலுக்குவரும் வகையில் இடைநீக்கம் செய்யப்படுவதாக கட்சியின் சட்டவிவகாரங்களுக்கான பணிப்பாளர் சட்டத்தரணி றுஷ்டி ஹபீப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், ஊழலுக்கும் சட்டத்தின் ஆட்சியினை பாதிக்கும் எந்தவொரு நடத்தைக்கும் எதிராக உறுதியான மற்றும் சமரசமற்ற கொள்கையினை கடைப்பிடிக்கின்றது. பொது நம்பிக்கையை சீர்குலைக்கும் அல்லது நாம் நிலைநிறுத்தும் நேர்மை மற்றும் பொறுப்புணர்வு கொள்கைகளுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் எந்தச் செயலையும் கட்சி அனுமதிப்பதில்லை. நடைபெற்று வரும் விசாரணைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெறக்கூடிய சட்ட நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இந்த இடைநீக்கம் அமுலில் இருக்கும். சட்டம் எந்தத் தலையீடும் இன்றி தனது நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதில் கட்சி நம்பிக்கை கொள்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கும் என எதிர்பார்க்கிறது.

குறிப்பிடப்பட்ட நபருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் அவருடைய தனிப்பட்ட செயல்களாகும்; அவை கட்சியின் கொள்கைகள், விழுமியங்கள் அல்லது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிப்பவை அல்ல என்பதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வலியுறுத்துகிறது.

இந்த விவகாரத்தின் முன்னேற்றங்களை கட்சி தொடர்ந்து கவனித்து வருவதுடன், தனது அரசியலமைப்பும் ஒழுக்காற்று நடைமுறைகளும் ஏற்படுத்திய விதிமுறைகளுக்கு அமைவாக தேவையான மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.” எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now