New Updates! Fresh news just arrived.

தேசிய கல்விக் கல்லூரி மீளாய்வு குழுவில் முஸ்லிம் பிரதிநித...

News

தேசிய கல்விக் கல்லூரி மீளாய்வு குழுவில் முஸ்லிம் பிரதிநிதி இல்லாமை: கவலை வெளியீடு!

April 4, 2026 7:36 pm
தேசிய கல்விக் கல்லூரி மீளாய்வு குழுவில் முஸ்லிம் பிரதிநிதி இல்லாமை: கவலை வெளியீடு!
நாடளாவிய ரீதியில் தேசிய கல்விக் கல்லூரிகளின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள ஐவர் கொண்ட நிபுணர் குழுவில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரும் இடம்பெறாதது தொடர்பாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சங்க ஆலோசகரும் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல். முகம்மட் முக்தார் கருத்துத் தெரிவிக்கையில், கல்வி அமைச்சு முன்னெடுத்து வரும் கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தேசிய கல்விக் கல்லூரிகளின் தற்போதைய கட்டமைப்புகளை ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்குவதற்காக இந்நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவரின் கூற்றுப்படி, இக்குழுவில் மூன்று சிங்கள பேராசிரியர்கள், ஒரு தமிழ் பேராசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் கல்விச் சேவையாளர் இடம்பெற்றுள்ளதுடன், முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரும் சேர்க்கப்படாதது ஏற்றுக்கொள்ள முடியாததாகும் எனக் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் உள்ள தமிழ் மாணவர்களை கருத்தில் கொண்டு தமிழ் பேராசிரியர் ஒருவர் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அட்டாளைச்சேனை மற்றும் தர்காடவுண் போன்ற பகுதிகளில் அதிகளவு முஸ்லிம் மாணவர்கள் பயிலும் தேசிய கல்விக் கல்லூரிகளை பிரதிநிதித்துவப்படுத்த முஸ்லிம் பேராசிரியர் ஒருவர் சேர்க்கப்படாதது கல்வி அமைச்சின் தவறாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இதற்கு முன்னர் கல்விச் சபை அமைப்பில் முஸ்லிம் பிரதிநிதி இல்லாமை குறித்து பாராளுமன்றத்தில் எழுந்த எதிர்ப்புகளுக்குப் பின்னர் தான் ஒருவர் நியமிக்கப்பட்ட சம்பவத்தையும் நினைவூட்டிய அவர், இவ்வாறான விடயங்கள் முஸ்லிம் சமூகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் நடவடிக்கைகளில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான புறக்கணிப்பு காணப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றதாகவும், இதற்கான பின்னணியில் சில தரப்புகள் செயல்படுகின்றனவா என்பதையும் ஆராய வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக உரிய கவனம் செலுத்தி சமநிலையான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட தரப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now