New Updates! Fresh news just arrived.

தனியார் பேருந்து சாரதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள ச...

News

தனியார் பேருந்து சாரதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள சட்ட நடவடிக்கை!

August 12, 2026 9:39 am
தனியார் பேருந்து சாரதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள சட்ட நடவடிக்கை!
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினுடைய செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சொகுசுப் பேருந்துச் சேவைகளினை இயக்கிவரும் பேருந்துகளுக்கு எதிராகவும், வடக்கு மாகாணத்தினுள் உரிய பதிவுகள் மற்றும் அனுமதிகளின்றி பணியாளர்களினை போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்துச் சேவைகளுக்கு எதிராகவும், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் பொலிஸாரும் இணைந்து விரைவில் விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக அதன் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தியோகபூர்வமாக கடிதமானது அனுப்பி, பொலிஸாரின் ஒத்துழைப்போடு ஒருங்கிணைந்த சுற்றிவளைப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளினை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு சேவையில் ஈடுபட்டு வரும் மொத்தம் பத்து பேருந்துகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினுடைய செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டு வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சட்டவிரோத சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட பயணிகள் போக்குவரத்து முறைமையினை பாதிப்பதுடன், சட்டபூர்வமாக சேவையாற்றும் பேருந்து இயக்குநர்களுக்கும் அநீதி விளைவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் ஏனைய பணியிடங்களுக்கு பணியாளர்களினை ஏற்றிச் செல்லும் பேருந்துகளினை பதிவு செய்து சட்டபூர்வமாக இயங்குவதற்காக போதுமான கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்ததாகவும், குறித்த அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இதுவரை பதிவு செய்யப்படாமல் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகளுக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த விசேட நடவடிக்கையின் போது, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினுடைய பறக்கும் படை அதிகாரிகளும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து சம்பந்தப்பட்ட பேருந்துகளை பரிசோதித்து மற்றும் வழித்தட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்களினை ஆய்வு செய்வதுடன், அனுமதியின்றி சேவையில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்படும் பேருந்துகளுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனுமதியற்ற பேருந்துகள் சேவையினை ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கும், அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் கால அட்டவணைகளுக்கு அமைவாகவே சேவைகள் இடம்பெறுவதினை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சட்டத்தினுடைய ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் எந்தவொரு பேருந்திற்கும் இனி சலுகை வழங்கப்படமாட்டாது எனவும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினுடைய தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now