New Updates! Fresh news just arrived.

நிந்தவூர் கடற்கரையில் கடல் அரிப்பு தீவிரம்: மீனவர்களும் ப...

News

நிந்தவூர் கடற்கரையில் கடல் அரிப்பு தீவிரம்: மீனவர்களும் பொதுமக்களும் பெரும் அவதி!

June 21, 2026 5:52 pm
நிந்தவூர் கடற்கரையில் கடல் அரிப்பு தீவிரம்: மீனவர்களும் பொதுமக்களும் பெரும் அவதி!
நிந்தவூர் கடற்கரைப் பகுதியில், குறிப்பாக பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசளினை அண்மித்த பகுதியில் ஏற்பட்டிருக்கும் தொடர்ச்சியான கடல் அலை தாக்கத்தினாலும், கடல் அரிப்பு காரணமாகவும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களினை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடல் அரிப்பு தீவிரமடைந்துள்ளதால், கரைவலை மீனவர்கள் தங்களது வழக்கமான மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். கடற்கரைப் பகுதியில் வலைகளை இழுப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாத காரணத்தால், அவர்கள் தற்போது வீதியோரப் பகுதிகளில் வலை இழுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக கடல் அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக, கரைவலை மீனவர்கள் தங்களது தோணிகளை பயன்படுத்தி சுதந்திரமாக கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதிலும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். மேலும், வலைகளை கரைக்கு இழுத்துவர முடியாத நிலை அவர்களின் தொழிலையும் வருமானத்தையும் பாதித்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

மீனவர்களின் இந்த நடவடிக்கையால், அப்பகுதி வீதியை பயன்படுத்தும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, அன்றாடம் பயணிக்கின்ற வாகன ஓட்டிகள், மீன் குளிரூட்டும் லொறிகள் மற்றும் தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்டோர் வீதியோரத்தில் இழுக்கப்படும் வலைகளினால் போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறுகளினை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலைமை மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடல் அரிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் நிரந்தர தீர்வொன்றை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடல் அரிப்பின் தாக்கத்தால் தொடர்ந்து பாதிக்கப்படும் நிந்தவூர் கடற்கரைப் பகுதிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now