New Updates! Fresh news just arrived.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது - G...

News

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது

September 4, 2026 2:53 pm
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் இன்று (4) கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று முற்பகல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவரிடம் சில மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர், குறித்த ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்காக 06 எயார்பஸ் A-330 விமானங்கள் மற்றும் 08 A-350 ரக விமானங்களை கொள்முதல் செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக அன்றைய ஸ்ரீலங்கன் விமானச் சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியான நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஆரம்பித்த விசாரணைகளுக்கு அமைவாக, ஸ்ரீலங்கன் விமானச் சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கடந்த மார்ச் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், கபில சந்திரசேன கடந்த மே 08 ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.

அது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இதனிடையே, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள ஷமீந்திர ராஜபக்ஷ ஆகியோரைக் கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், பிரான்ஸின் எயார்பஸ் தாய் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த ஆகஸ்ட் மாத முதலாவது வாரத்தில் நாட்டிற்கு வருகை தந்து ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று முற்பகல் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now