New Updates! Fresh news just arrived.

மெட்ரோ பேருந்து சேவை ஒகஸ்ட் முதல் அமுலுக்கு!

News

மெட்ரோ பேருந்து சேவை ஒகஸ்ட் முதல் அமுலுக்கு!

February 13, 2026 2:40 am
மெட்ரோ பேருந்து சேவை ஒகஸ்ட் முதல் அமுலுக்கு!
நாட்டின் போக்குவரத்துக் கட்டமைப்பினை மிகவும் வினைத்திறன் மிக்க, பாதுகாப்பான மற்றும் நவீன தொழில்நுட்பத்தோடு, போக்குவரத்துச் சேவையாக மாற்றி, பொதுமக்களுக்குக் கௌரவமான மற்றும் நம்பகமான சேவையினை வழங்குவதற்காக முழுப் போக்குவரத்து கட்டமைப்பிலும் விரைவான மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத் துறையில் மறுமலர்ச்சியினை ஏற்படுத்துவதற்காக பொருளாதாரப் போட்டித்தன்மை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, டிஜிட்டல் மாற்றம், சமூக சமத்துவம் மற்றும் பிரவேசம் மற்றும் பாதுகாப்பு ஆகிய 05 தூண்களின் கீழ் போக்குவரத்து அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ள மூலோபாயத் திட்டம் தொடர்பில் இதன்போது ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் தற்போது நிலவுகின்ற கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக 'Lanka Metro Transit' பஸ் சேவையினை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும், குறித்த திட்டத்தின் கீழ் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் தற்போது தயார் செய்யப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் இதற்கான பேருந்துகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பினை சுற்றியுள்ள 6 பிரதான வீதிகள் ஊடாக குறித்த திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாகச் செயற்படுத்தப்படவுள்ளதோடு, மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படும் இந்தத் திட்டம் பின்னர் காலி மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும், அடுத்த 03 ஆண்டுகளுக்குள் 08 பிரதான நகரங்களுக்கும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த முன்னோடித் திட்டத்தின் ஊடாக கொழும்பு நகருக்கு நாளாந்தம் பிரவேசிக்கும் தனியார் வாகனங்களினுடைய எண்ணிக்கையினை குறைத்து, பயணிகளினை பொதுப் போக்குவரத்தை நோக்கி ஈர்க்க எதிர்பார்க்கப்படுகின்றது.

பேருந்துகளுக்கான முன்னுரிமைப் பாதைகளை அடையாளம் காண்பதும், அவற்றின் வினைத்திறனைப் பேணுவதும் அவசியமானது என்று ஜனாதிபதி இங்கு வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பொதுமக்களுக்குத் தரமான சேவையினை வழங்குவதற்காக, தற்போது ஒழுங்கீனமாகக் காணப்படும் பேருந்து சேவைகளுக்குப் பதிலாக பேருந்து நிறுவனங்கள் (கிளஸ்டர்) முறையினை நோக்கி நகர வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறந்த போக்குவரத்துச் சேவை கிடைப்பதே மக்களினுடைய தேவையெனவும் அது எந்த வகையில் கிடைக்கின்றது என்பது அவர்களுக்கு முக்கியமல்ல என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நமது நகரங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை அல்ல. காலப்போக்கில் தாமாகவே உருவானவை என்பதினால், தற்போதுள்ள நகரக் கட்டமைப்பிற்குள் போக்குவரத்து முகாமைத்துவத்தினை மிகவும் அவதானமாக மேற்கொள்ள வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, 'பேருந்து நிறுவனங்கள்' (Cluster) முறையை நிறுவுவதே இப்பிரச்சினைக்குச் சிறந்த தீர்வாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறையின் கீழ், பேருந்து உரிமையாளர்களின் பேருந்துகளை ஈடுபடுத்துவதற்காக ஒரு நிறுவனம் உருவாக்கப்படும் என்றும், அதில் இலாபம் தொடர்பான பிரச்சினை எழுந்தால் குறித்த நிறுவனத்திற்கு அரசாங்கத்தின் ஊடாகச் சலுகைகளினை வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது பேருந்து உரிமையாளருக்கும் நிறுவனத்திற்கும் இடையில் ஒரு ஒப்பந்தமும், அதேபோன்று சேவையினை தொடர்ச்சியாக வழங்குவது தொடர்பாக அரசாங்கத்திற்கும் பேருந்து நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றும் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தினை அவர் வலியுறுத்தினார்.

புதிய பேருந்துகளை இறக்குமதி செய்து பெருமளவு நிதியினை செலவு செய்வதை விட இது எளிதான காரியமாக அமையும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now