New Updates! Fresh news just arrived.

4,300-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சேவையிலிருந்து இட...

News

4,300-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சேவையிலிருந்து இடைவிலகல்!

August 17, 2026 6:46 am
4,300-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சேவையிலிருந்து இடைவிலகல்!
கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் ஆயிரக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள் தமது பணியை விட்டு விலகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு முதல் 2026 ஜூன் 24ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 4,308 பொலிஸ் அதிகாரிகள் சேவையிலிருந்து விலகியுள்ளனர். இவர்களில் 3,936 ஆண் அதிகாரிகளும் 372 பெண் அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.

2025ஆம் ஆண்டிலேயே அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர். அந்த ஆண்டில் 838 ஆண்கள் மற்றும் 49 பெண்கள் என மொத்தம் 887 பேர் சேவையிலிருந்து விலகியுள்ளனர்.

இதேவேளை, 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 699 ஆண் அதிகாரிகளும் 59 பெண் அதிகாரிகளுமாக 758 பேர் பணியிலிருந்து விலகியுள்ளனர்.

சேவைக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே ஓய்வு பெறுதல், வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளைத் தேடிச் செல்லுதல் உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்கள் அதிகாரிகள் விலகுவதற்கு முக்கிய காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் பொலிஸ் உத்தரவுகளுக்கு எதிராக செயற்பட்டமை உள்ளிட்ட காரணங்களுக்காக 658 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தற்போது பொலிஸ் திணைக்களத்தில் 30,815 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 28,164 இடங்கள் பொலிஸ் சேவையிலும், 2,651 இடங்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையிலும் காணப்படுகின்றன.

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக புதிய ஆட்சேர்ப்புகள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதேநேரம், பொலிஸ் அதிகாரிகளின் பணித்திறன் மற்றும் நலனை மேம்படுத்த பல்வேறு திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல், அதிகாரிகளுக்கான விடுதி வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் மருத்துவ சேவைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் இதில் அடங்குகின்றன.

மேலும், உளவியல் ஆலோசனை, நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரப் பரிசோதனைத் திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. அதிகாரிகள் தங்களது பிரச்சினைகளை நேரடியாக பொலிஸ்மா அதிபரிடம் முன்வைக்கும் வகையில் விசேட சந்திப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பொலிஸ் அதிகாரிகள் சேவையிலிருந்து விலகும் நிலையை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now