New Updates! Fresh news just arrived.

முஸ்லிம் தேசபக்தர்களை மாவீரர்களாக அங்கீகரிக்க வேண்டும்: க...

News

முஸ்லிம் தேசபக்தர்களை மாவீரர்களாக அங்கீகரிக்க வேண்டும்: கலிலூர் ரஹ்மான்!

February 3, 2026 2:23 pm
முஸ்லிம் தேசபக்தர்களை மாவீரர்களாக அங்கீகரிக்க வேண்டும்: கலிலூர் ரஹ்மான்!
இலங்கை தனது 78 வது சுதந்திர தினத்தினை கொண்டாடும் நிலையில், ஏகாதிபத்திய ஆட்சிகளுக்கு எதிராகப் போராடியதற்காக “துரோகிகள்” என்று அழைக்கப்பட்ட முஸ்லிம் தேசபக்தர்களினை அதிகாரப்பூர்வமாக மாவீரர்களாக அங்கீகரிக்க வேண்டிய அவசியமுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினருமான கலிலூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும், திருகோணமலைப் பிரதேசத்தி சேர்ந்த சேகு தீதி, பீர் முஹம்மது மௌலவி மற்றும் சலாம் உடையார், மட்டக்களப்புப் பகுதியிநை சேர்ந்த மீரா ஹுசைன் காரியப்பர், ஹுசைன் லெப்பை மற்றும் உதுமா லெப்பை, அம்பாறைப் பிரதேசத்தினை சேர்ந்த அபூபக்கர் ஈஸா, அனீஸ் லெப்பை ஆகியோர் ஏகாதிபத்திய ஆட்சிகளுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டமையினை அவர் குறிப்பிட்டார்.

இதேபோன்று ஊவா–வெல்லஸ்ஸ கிளர்ச்சியில் பங்கேற்ற சிங்கள தேசபற்றாளர்களும் அக்காலத்தில் துரோகிகள் என்று அழைக்கப்பட்டதாகவும், பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக அவர்கள் மாவீரர்களாக அங்கீகரிக்கப்பட்டதாகவும் கலிலூர் ரஹ்மான் நினைவூட்டினார்.

ஆனால், முஸ்லிம் தேசபக்தர்களுக்கு இதுவரையும் அதேபோன்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், அக்கால அரசாங்கங்களில் இருந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளினால் குறித்த விடயம் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

போர்த்துகீசியர், டச்சுக்காரர் மற்றும் பிரித்தானியர் ஆகிய ஏகாதிபத்திய சக்திகள் இலங்கையினுடைய அரசியல் பிளவுகளினை பயன்படுத்தி நாட்டின் இறையாண்மையினை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், அந்நேரத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் மத, அரசியல் மற்றும் சிவில் நடவடிக்கைகளில் வெளிநாட்டு தலையீடுகள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலைக்கு எதிராக தேசப்பற்றுள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் ஒருங்கிணைந்து போராடியதாகவும், முஸ்லிம் சமூகத்தில் சித்தி லெப்பை, வாப்பிச்சி மரிக்கார் மற்றும் ஒராபி பாஷா, மாப்பிள்ளை லெப்பை அலீம், அப்துல்லா பின் அல் பாதிப் அல் யெமனி மற்றும் ஐ.எல்.எம். அப்துல் அஜீஸ் உள்ளிட்ட மத மற்றும் சிவில் தலைவர்கள் முக்கிய பங்காற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தளத்தில் டாக்டர் டி.பி. ஜெயா, சர் ராசிக் ஃபரிட் மற்றும் டாக்டர் பதியுதீன் மஹ்மூத், சர் மகன் மாக்கார் மற்றும் என்.எச்.எம். அப்துல் காதர், டாக்டர் எம்.சி.எம் மற்றும் கலீல், ஏ.எம்.ஏ.அஜீஸ் ஆகியோர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், “முஸ்லிம் தேசம்”, “ஞான தீபம்”, “முஸ்லிம் பாதுகாவலன்”, “இஸ்லாம் மித்திரன்” உள்ளிட்ட பத்திரிகைகளானது முஸ்லிம் சமூகத்தில் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய உலக புவிசார் அரசியல் சூழலில் மத மற்றும் அரசியல் அடிப்படையிலான ஒற்றுமை அவசியம் எனவும், எதிர்வரும் 2026 குடியரசு தினத்திற்கு முன்பு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், மேற்கூறிய முஸ்லிம் தேசபக்தர்களினையும் மாவீரர்களாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலிலூர் ரஹ்மான் வலியுறுத்தினார்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now