New Updates! Fresh news just arrived.

ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமருக்கு இரண்டாவது தடவையாக தேசிய ...

News

ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமருக்கு இரண்டாவது தடவையாக தேசிய விருது: சமூகப் பிரச்சினைகளை அறிக்கையிடும் பணிக்காக தேசிய அங்கீகாரம்!

November 11, 2026 1:46 pm
ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமருக்கு இரண்டாவது தடவையாக தேசிய விருது: சமூகப் பிரச்சினைகளை அறிக்கையிடும் பணிக்காக தேசிய அங்கீகாரம்!
கொழும்பு, சின்னமன் கிரண்ட் ஹோட்டலில் நடைபெற்ற 27ஆவது தேசிய ஊடக விருது வழங்கும் விழாவில், தமிழன் பத்திரிகைக்காக சமூகப் பிரச்சினைகளை அறிக்கையிடும் பிரிவில் ஊடகவியலாளர் நூருல் ஹுதாவுக்கு தேசிய விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமும் (Sri Lanka Press Institute), இலங்கைப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் (Editors’ Guild of Sri Lanka) இணைந்து வருடாந்தம் ஏற்பாடு செய்யும் தேசிய ஊடக விருது வழங்கும் விழாவிலேயே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

சிலோன் மீடியா போரத்தின் பொதுச் செயலாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், அல்-மீஸான் பவுண்டேஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளருமான நூருல் ஹுதா உமர், தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக இத்தேசிய ஊடக விருதைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த பல ஆண்டுகளாக தமிழன் உட்பட பல்வேறு பத்திரிகைகளில் சமூகப் பிரச்சினைகள், மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைச் சவால்கள், கல்வி, சுகாதாரம், சமூக நீதி, மனித உரிமைகள் மற்றும் அரசியல், சமூக விவகாரங்கள் தொடர்பில் 270 ஆய்வுக் கட்டுரைகளை இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, சமூகத்தில் கவனிக்கப்படாமல் விடப்படும் பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து, அவற்றின் பின்னணியையும் பாதிப்புகளையும் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும் வகையில் அவரது ஆய்வுக் கட்டுரைகள் அமைந்துள்ளன. மக்களின் குரலாகவும், சமூக மாற்றத்திற்கான கருத்துப் பதிவுகளாகவும் அவரது எழுத்துக்கள் வெளிவந்துள்ளன.

2009ஆம் ஆண்டு ஊடகத்துறையில் தனது பயணத்தை ஆரம்பித்த நூருல் ஹுதா உமர், கடந்த 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகின்றார். ஆயிரக்கணக்கான செய்தி அறிக்கைகள் மற்றும் 270 ஆய்வுக் கட்டுரைகள் ஊடாக சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.

இவரது ஊடகப் பங்களிப்புகளுக்காக சர்வதேச, தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

ஊடகப் பணிக்கு அப்பால் சமூக, கல்வி மற்றும் மனிதாபிமானப் பணிகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் இவர், பல்வேறு சமூக அமைப்புகளுடனும் இணைந்து பொதுநலப் பணிகளில் பங்களித்து வருகின்றார்.

தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக தேசிய விருதைப் பெற்றுள்ளமை அவரது ஊடகப் பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதுடன், தமிழன் பத்திரிகையின் ஆய்வுக் கட்டுரை மற்றும் சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணரும் ஊடகப் பணிக்கும் கிடைத்துள்ள தேசிய அங்கீகாரமாக இது கருதப்படுகின்றது.

எம்.என்.எம். அப்ராஸ்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now