New Updates! Fresh news just arrived.

சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேசிய வழிகாட்டல் : வருடத...

News

சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேசிய வழிகாட்டல் : வருடத்திற்கு 10,000 முறைப்பாடுகள்

November 10, 2026 11:04 am
சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேசிய வழிகாட்டல் : வருடத்திற்கு 10,000 முறைப்பாடுகள்
சிறுவர்கள் தொடர்பான செய்தி அறிக்கையிடலின் போது சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தேசிய வழிகாட்டல் கோவை (National Guidelines) ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் பல்வேறு துஷ்பிரயோகங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வழிகாட்டல் கோவை குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளரும், சட்டத்தரணியும், சமூகவியலாளருமான ஷானிகா மலல்கொட, ஆண்டுதோறும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 10,000க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகி வருவதாகத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,"இவ்வாறானதொரு வழிகாட்டல்கோவையை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்குப் பல காரணங்கள் உள்ளன.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஆண்டுக்கு சுமார் 10,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் வருகின்றன. இன்று பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான கொடூரங்கள் மட்டுமன்றி, சமூகத்தில் புதிய சவால்களும் உருவெடுத்துள்ளன.

இணையவெளியில் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படுதல், இளம்வயது கர்ப்பம் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டினால் சிறுவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் என்பன அதிகரித்துள்ளன.

அதுமட்டுமன்றி, பல சந்தர்ப்பங்களில் அறியாமை காரணமாக மனிதர்களாகிய நம்மால் தவறுகள் இழைக்கப்படுகின்றன.

ஆனால் இறுதியில் இது சிறுவர்களின் பாதுகாப்பையே பாதிக்கிறது. எனவே, இந்த வழிகாட்டல் கோவையின் மூலம் ஒட்டுமொத்த குடிமக்களின் பொறுப்பையும் உறுதிப்படுத்துவது அத்தியாவசியமானதாகும்," எனக் குறிப்பிட்டார்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை கணினி அவசர கால பதிலளிப்பு மன்றத்தின் (Sri Lanka CERT) சிரேஷ்ட தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் சாரிக தமுனுபொல கருத்துத் தெரிவிக்கையில், இணையதளம் ஊடாக சிறுவர்களுக்கு இடம்பெறும் துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகள் தீவிரமாக அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

"சிறுவர்கள் தொடர்பான மிகவும் உணர்திறன் வாய்ந்த டிஜிட்டல் ஊடகச் சம்பவங்கள் 2025ஆம் ஆண்டில் 53 ஆகப் பதிவாகியிருந்தன. அந்த எண்ணிக்கை இந்த ஆண்டின் (2026) நவம்பர் மாதமளவில் 180 ஆக உயர்ந்துள்ளது.

இவை இணையம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட மிக அதிக ஆபத்துள்ள சம்பவங்களாகும்.

இச்சம்பவங்களை ஆராயும்போது, சமூக ஊடகங்களில் செய்தி அறிக்கையிடலுடன் சிறுவர்கள் குற்றச்செயல்களுக்கு இரையாவதற்கு நேரடித் தொடர்பு இருப்பது தெரியவருகிறது.

குறிப்பாக, சமூக ஊடகங்களில் வருமானம் ஈட்டும் அம்சங்கள் (Monetization features) நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சிறுவர்கள் தொடர்பான உள்ளடக்கங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதைக் காணமுடிகிறது.

சிலவேளைகளில் பெற்றோர்களாலேயே இது செய்யப்படலாம். இதன் காரணமாக, சுய அறிவின்றி சிறுவர் ஒருவருக்கு ஏற்படும் தாக்கம் மிகவும் பாரதூரமானது," என்று அவர் எச்சரித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now