New Updates! Fresh news just arrived.

கல்விச் தொழிற்சங்கங்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்ற...

News

கல்விச் தொழிற்சங்கங்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை!

January 13, 2026 3:18 pm
கல்விச் தொழிற்சங்கங்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை!
ஜனாதிபதிக்கும் சில கல்வி தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (13) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கத்திற்கு ஆதரவான சில சங்கங்களுக்கு மாத்திரமே இந்தப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சில கல்வி தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இலங்கை சுயாதீன ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்திமால் விஜேரத்ன,

"அரசாங்கம் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஒரு குழுவும் இருக்கின்றது. அந்தக் குழுவுடன் மாத்திரமே அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றது. இன்றும் ஒரு பேச்சுவார்த்தை உள்ளது. அந்தப் பேச்சுவார்த்தைக்கு இந்த போலிச் சீர்திருத்தங்களை ஆதரிப்பவர்கள் மாத்திரமே அழைக்கப்பட்டுள்ளனர்." எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை, புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அல்லது அதற்கான கற்றல் தொகுதிகளை (Modules) தயாரிக்கும் போது இம்முறை ஆசிரியர் ஆலோசகர்களின் பங்களிப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன், தற்போதைய அரசாங்கத்தினால் அச்சிடப்பட்டுள்ள புதிய கல்விச் சீர்திருத்த கற்றல் தொகுதிகளில், சிறுவர்களுக்குப் பொருத்தமற்ற இணையதளங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் கடந்த சில நாட்களாகப் பல தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.

குறித்த சீர்திருத்தங்களைத் திரும்பப் பெற்று, உரிய தரப்பினருடன் முறையான பேச்சுவார்த்தைகளை நடத்தி, முறையான சீர்திருத்தச் செயல்முறையொன்றை முன்னெடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now