New Updates! Fresh news just arrived.

புதிதாக 30,000 ஆசிரியர்கள் - பிள்ளைகளை பாதுகாக்கும் புதிய...

News

புதிதாக 30,000 ஆசிரியர்கள் - பிள்ளைகளை பாதுகாக்கும் புதிய கல்வி முறைமை: பிரதமர்!

October 18, 2026 3:13 pm
புதிதாக 30,000 ஆசிரியர்கள் - பிள்ளைகளை பாதுகாக்கும் புதிய கல்வி முறைமை: பிரதமர்!
எதிர்வரும் ஆண்டில் 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்காகப் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் மாநாட்டில் இன்று (18) கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், நடப்பு ஆண்டில் தரம் 1க்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அனைத்துப் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் தற்போதைய அரசாங்கத்தினால் புதிய கல்வி முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பரீட்சைக்கு மாத்திரம் முகங்கொடுக்கும் பிள்ளைக்குப் பதிலாக, எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புகளுடன் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பு எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

இதேவேளை, 17,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் நவம்பர் 20ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக அமைப்புக்கு 2,000 விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளிப்படுத்தினார்.

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதமளவில் ஒட்டுமொத்தக் கல்வி கட்டமைப்புக்கும் புதிதாக சுமார் 30,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கு மேலதிகமாகப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now